மீட்புப் பணி தீவிரம்; மனிதத் தவறால் விபத்து ஏற்பட்டதாக அமைச்சர் டி. சித்திக் குற்றச்சாட்டு – கட்டுமான நிறுவனம் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை


 வயநாடு, ஜூலை 7:

கேரள மாநிலம் வயநாட்டில் சுரங்கப்பாதை சாலை கட்டுமானப் பணி நடைபெற்று வந்த பகுதியில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. பலர் காயமடைந்த நிலையில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

கோழிக்கோடு - வயநாடு இடையேயான அனக்கம் பொயில் - கல்லாடி - மேப்பாடி சுரங்கப்பாதை திட்டத்தின் நுழைவாயில் அருகே, கனமழையைத் தொடர்ந்து இந்த நிலச்சரிவு ஏற்பட்டது. கல்லாடி மீனாட்சி பாலம் அருகே நிகழ்ந்த இந்த விபத்தில் சுரங்கத் திட்டப் பணியாளர்கள் தங்கியிருந்த தற்காலிக முகாம்கள் பாதிக்கப்பட்டன.

முதலில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட நிலையில், பின்னர் மேலும் இருவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டதால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), தீயணைப்பு வீரர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

"இது மனிதத் தவறால் ஏற்பட்ட நிலச்சரிவு"

சம்பவ இடத்தை பார்வையிட்ட கேரள அமைச்சர் டி. சித்திக், "இது இயற்கையாக ஏற்பட்ட நிலச்சரிவு மட்டுமல்ல; நிர்வாக அலட்சியம் மற்றும் மனிதத் தவறின் விளைவு. நிலச்சரிவு அபாயம் குறித்து மாவட்ட நிர்வாகம் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்தும் தேவையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்தப்படும்" என்று தெரிவித்தார்.

மேலும், வயநாடு மற்றும் கோழிக்கோடு பகுதிகளிலிருந்து மொத்தம் 60 வீரர்கள் கொண்ட இரண்டு தேசிய பேரிடர் மீட்புப் படை அணிகள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

"சுரங்கப் பணிகளே காரணம்" – உள்ளூர் மக்கள் குற்றச்சாட்டு

சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய உள்ளூர்வாசி ஹம்சா மந்திகரா, "பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்தபோது திடீரென மண் மற்றும் பாறைகள் மலையிலிருந்து சரிந்து வந்தன. சில நிமிடங்களில் பேருந்து நிறுத்தமே மண்ணில் புதைந்துவிட்டது. சுரங்கப் பணிக்காக தோண்டப்பட்ட மண் சுமார் 40 ஏக்கர் பரப்பில் குவிக்கப்பட்டிருந்தது. மழை பெய்தால் ஆபத்து ஏற்படும் என்று பலமுறை எச்சரித்தோம். ஆனால் எங்கள் கோரிக்கைகள் கவனிக்கப்படவில்லை" என்றார்.

மற்றொரு உள்ளூர்வாசியான ஜபிர் ஷா கூறுகையில், "விபத்து நடந்த நேரத்தில் கட்டுமானப் பகுதியில் குறைவான பணியாளர்கள் இருந்ததால் பாதிப்பு மேலும் அதிகரிக்காமல் தப்பியது. பேருந்து நிழற்குடை மற்றும் அருகிலிருந்த மசூதியும் மண்ணில் புதைந்துவிட்டன. சுரங்கப் பணிகள் தொடர்ந்தால் மேலும் ஆபத்து ஏற்படும்" என்று தெரிவித்தார்.

கட்டுமான நிறுவனம் மௌனம்

நிலச்சரிவு தொடர்பாக உள்ளூர் மக்கள் மற்றும் அரசுத் தரப்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனம் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கத்தையும் வெளியிடவில்லை.

இதற்கிடையில், வயநாடு மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை விடுத்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீட்புப் பணிகள் சவாலான சூழலில் நடைபெற்று வருகின்றன.


Previous Next

نموذج الاتصال