பெங்களூரு, ஜூலை 7:
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற 7-வது உலக திருக்குறள் மாநாட்டில், திருக்குறளை இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற முக்கிய தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
பெங்களூருவில் உள்ள செயின்ட் ஜோசப் பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் சங்கம் மற்றும் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய இந்த மாநாடு காலை முதல் மாலை வரை உற்சாகமாக நடைபெற்றது.
திருவள்ளுவர் சங்கத் தலைவர் எஸ்.டி. குமார் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, பல்கலைக்கழக இணைவேந்தர் கிறிஸ்டோ செல்வன், இந்திய மொழிகள் துறைத் தலைவர் அருள்மணி, இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறீதரன், ஸ்ரீநாத் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
"திருக்குறளை வாசிப்பது தமிழர்களுக்கு கிடைத்த வரம்"
மாநாட்டில் பேசிய விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, திருக்குறள் உலக மனிதகுலத்திற்கே வழிகாட்டும் ஒப்பற்ற இலக்கியம் எனக் குறிப்பிட்டார்.
"மகாத்மா காந்தி கூட திருக்குறளை அதன் மூல வடிவில் படிக்க தமிழைக் கற்க விரும்பியவர். தமிழர்களுக்கு தாய்மொழியில் திருக்குறளை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பது மிகப்பெரிய வரமாகும். இளைஞர்கள் தினமும் திருக்குறளைப் படித்து வாழ்வியல் வழிகாட்டியாகக் கொள்ள வேண்டும். திருக்குறள் வன்முறையற்ற, சமத்துவமான சமூகத்தை உருவாக்கும் சக்தி கொண்டது," என்றார்.
மேலும், தமிழக அரசின் பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்ட வடிவமைப்பு குழுத் தலைவராக தனது பொறுப்பின் மூலம் திருக்குறளை மாணவர்களிடம் மேலும் பரவலாக கொண்டு செல்ல முயற்சி மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.
கர்நாடக பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை அமைக்க கோரிக்கை
திருவள்ளுவர் சங்கத் தலைவர் எஸ்.டி. குமார் பேசுகையில், கர்நாடகாவில் தமிழ் மொழி கற்போரின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், உலக திருக்குறள் மாநாட்டில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் குடும்பத்துடன் பங்கேற்றது தமிழின் மீதான பற்றை வெளிப்படுத்துவதாகக் கூறினார்.
கர்நாடக மாநில பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை (Tamil Chair) அமைக்க வேண்டும் என்றும், செயின்ட் ஜோசப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை தொடங்கப்பட்டால் அதற்காக ரூ.10 லட்சம் நன்கொடையாக வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் அறிவித்தார்.
முக்கிய தீர்மானங்கள்
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:
- திருக்குறளை இந்தியாவின் தேசிய நூலாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.
- நாடு முழுவதும் கல்வி நிலையங்களில் திருக்குறளை கட்டாயமாக கற்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தமிழ் மொழி மற்றும் திருக்குறள் ஆய்வுகளை ஊக்குவிக்கும் வகையில் பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் அமைக்க வேண்டும்.
60-க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் பங்கேற்பு
மாநாட்டில் "திருக்குறள் உணர்த்தும் உலக அமைதியும் மாந்தநேய மாண்புகளும்" என்ற நூல் வெளியிடப்பட்டது.
திருச்சியைச் சேர்ந்த மூளை நரம்பியல் நிபுணர் டாக்டர் எம்.ஏ. அலீம், திருக்குறளில் இடம்பெறும் குறிப்பறிதல் அதிகாரத்தில் உள்ள முகபாவனைகள் மற்றும் நவீன மூளை நரம்பியல் அறிவியலுக்கு இடையிலான தொடர்பு குறித்து ஆய்வுரை வழங்கினார்.
மேலும் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, கனடா உள்ளிட்ட நாடுகளிலிருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் 60-க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் திருக்குறள் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்து உரையாற்றினர்.
