சென்னை: தமிழக ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக பணியாற்றி வந்த அ. அருண் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, லஞ்ச ஒழிப்புத் துறையின் ஐ.ஜி. சி. மகேஸ்வரி, கூடுதல் பொறுப்பாக இயக்குநர் பதவியை கவனிப்பார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
அரசு வெளியிட்டுள்ள உத்தரவின்படி, அ. அருண் இனி தமிழ்நாடு காவலர் பயிற்சிப் பள்ளியின் இயக்குநராக பணியாற்றுவார்.
தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, நிர்வாக வசதிக்காக ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூத்த அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில், சென்னை மாநகர காவல் ஆணையராக பணியாற்றியிருந்த அ. அருண், பின்னர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்ட நிலையில், புதிய அரசு பதவியேற்ற பிறகு ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், அவரை தற்போது இடமாற்றம் செய்து, லஞ்ச ஒழிப்புத் துறையின் கூடுதல் பொறுப்பை சி. மகேஸ்வரிக்கு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த இடமாற்ற உத்தரவை உள்துறை செயலாளர் மணிவாசன் வெளியிட்டுள்ளார்.