“என் சுய விருப்பத்தால்தான் தவெகவில் இணைந்தேன்” - எம்.ஆர். விஜயபாஸ்கர் விளக்கம்

 

கரூர்: தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது தனது சொந்த முடிவு என்றும், யாருடைய நிர்பந்தத்தாலும் அந்த முடிவை எடுக்கவில்லை என்றும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழக வெற்றிக் கழகத்தில் சேர வேண்டும் என்று அக்கட்சியிலிருந்தோ அல்லது அதிமுகவில் இருந்து அக்கட்சிக்கு சென்ற முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்களிடமிருந்தோ எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை” என்று கூறினார்.

மேலும், தமிழக வெற்றிக் கழகத்தில் ஏற்கனவே இணைந்திருந்த முன்னாள் அமைச்சர்களான உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.சி. சம்பத், கடம்பூர் ராஜு, சிவபதி ஆகியோரிடம், கட்சியின் தற்போதைய சூழல் குறித்து மட்டுமே கேட்டறிந்ததாகவும், அதைத்தான் தனது முந்தைய பேட்டியிலும் தெரிவித்ததாகவும் விளக்கமளித்தார்.

தவெகவில் சேர வேண்டும் என்ற விருப்பம் அதிமுக நிர்வாகிகளிடையே இருந்ததாகவும், அதனால்தான் ஒன்றிய, நகர மற்றும் பகுதி செயலாளர்கள் பலரும் தன்னுடன் இணைந்து தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்ந்ததாகவும் அவர் கூறினார்.

நிர்வாகிகளின் கருத்துகளை கேட்ட பிறகும், பல கட்ட யோசனைகளுக்குப் பின்னரும்தான் இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்த எம்.ஆர். விஜயபாஸ்கர், “இது முழுக்க முழுக்க என் சுய முடிவு. யாருடைய அழுத்தமோ, நிர்பந்தமோ இல்லை. என் விருப்பத்தின்படியே தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தேன்” என்று மீண்டும் வலியுறுத்தினார்.

Previous Next

نموذج الاتصال