கரூர்: தமிழக முதல்வர் விஜய் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறான பதிவு வெளியிட்டதாகக் கூறப்படும் திமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
போலீஸார் தெரிவித்ததன்படி, கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பரளி பகுதியைச் சேர்ந்த வேலுப்பிள்ளை என்ற தங்கமணி (41), திமுகவின் வார்டு தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகியாக உள்ளார்.
கடந்த ஜூலை 10 அன்று முதல்வர் விஜய் கரூர் வந்திருந்தபோது, அவரை விமர்சிக்கும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் குளித்தலை நகரச் செயலாளர் விஜய் அளித்த புகாரின் அடிப்படையில், குளித்தலை போலீஸார் தங்கமணி மீது வழக்குப் பதிவு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து, ஜூலை 13 அன்று தங்கமணியை கைது செய்த போலீஸார், மருத்துவ பரிசோதனைக்காக குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இந்த தகவல் அறிந்த திமுகவினர், குளித்தலை சட்டப்பேரவை உறுப்பினர் அ. சந்திரன் மற்றும் ஒன்றியச் செயலாளர் தியாகராஜன் உள்ளிட்டோரின் தலைமையில் மருத்துவமனை வளாகத்தில் திரண்டனர்.
பின்னர், தங்கமணி குளித்தலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, அவருக்கு ஜாமீன் வழங்கியதையடுத்து, அவர் விடுவிக்கப்பட்டார்.