பயிர்க்கடன் தள்ளுபடி வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்; நாகை விவசாயி உயிரிழப்பை சுட்டிக்காட்டி பாஜக தலைவர் வலியுறுத்தல்

 

சென்னை, ஜூலை 6:

பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்று வீடு திரும்பிய நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 70 வயது விவசாயி சோமசுந்தரம் நெஞ்சுவலியால் உயிரிழந்ததாக வெளியான தகவலைத் தொடர்ந்து, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மாநில முதல்வர் விஜயை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் (X) பதிவில், தேர்தல் பிரசாரத்தின் போது வழங்கப்பட்ட வாக்குறுதியின்படி சிறு மற்றும் குறைந்த நிலம் வைத்துள்ள விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும், தேர்தலுக்கு முன் 5 ஏக்கருக்குள் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் அனைத்து பயிர்க்கடன்களும் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஆட்சிக்கு வந்த பிறகு ரூ.75,000 வரை மட்டுமே தள்ளுபடி செய்வதாக அறிவிக்கப்பட்டது வாக்குறுதியை மீறிய செயல் என குற்றம்சாட்டினார்.

பயிர்க்கடன் தள்ளுபடி கோரி விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களின் கோரிக்கைகளை அரசு அலட்சியப்படுத்துவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

இனியும் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முன்பாக தேர்தல் வாக்குறுதியின்படி பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் அரசை வலியுறுத்தியுள்ளார்.


Previous Next

نموذج الاتصال