திருச்சி, ஜூலை 6:
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களை வீடியோ மற்றும் ரீல்ஸ் எடுத்து மிரட்டும் சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் திங்கள்கிழமை மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை தொடர்பான காட்சிகளை வீடியோ அல்லது ரீல்ஸ் வடிவில் பதிவு செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த விதிமுறைகள் மீறப்படுவதாக மருத்துவப் பணியாளர்கள் குற்றம்சாட்டினர்.
கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் மூன்று முறை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களை வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும், சிலர் அரசியல் கட்சியினர் என்ற பெயரில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதுபோன்ற செயல்கள் பெண் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களின் தனியுரிமை, பாதுகாப்பு மற்றும் பணிச்சூழலை பாதிப்பதாகக் கூறிய அவர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் மாநில பொருளாளர் டாக்டர் அருளீஸ்வரன் கூறுகையில், கிண்டி கலைஞர் அரசு மருத்துவமனையில் மருத்துவர் மீதான தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் வெளிப்புற பாதுகாப்பு ஏற்பாடுகளை மேம்படுத்துமாறு சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருந்தாலும், அது முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை என்றார்.
மேலும், அரசு மருத்துவமனைகளில் அனுமதியின்றி வீடியோ மற்றும் ரீல்ஸ் எடுப்பவர்கள் மீது அரசு மருத்துவமனை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மருத்துவப் பணியாளர்கள் அளிக்கும் புகார்களின் மீது மருத்துவமனை நிர்வாகமும் காவல்துறையும் விரைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
