மேட்டூர்: சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள பண்ணவாடி பகுதியில் வழக்கமாக பருவகாலங்களில் மட்டுமே தங்கும் வலசைப் பறவைகள், இந்த ஆண்டு தாயகம் திரும்பாமல் தொடர்ந்து அங்கேயே காணப்படுவதால் இயற்கை மற்றும் பறவை ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் வெளிநாடுகள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான வலசைப் பறவைகள் பண்ணவாடிக்கு வருகின்றன. நீர்நிலைகள், போதுமான உணவு வளம் மற்றும் பாதுகாப்பான இயற்கைச் சூழல் காரணமாக அவை சில மாதங்கள் தங்கி, பின்னர் தங்கள் தாயகங்களுக்கு திரும்புவது வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டு, பொதுவாக வலசைப் பறவைகளாகக் கருதப்படும் மீசை ஆலா, மழைக்காடை மற்றும் சிற்றாலா ஆகிய பறவைகள் வழக்கத்தை விட நீண்ட காலமாக பண்ணவாடியில் தங்கியுள்ளன.
இந்த அரிய நிகழ்வை சிறகுகள் மற்றும் இயற்கை ஆர்வலர் கழகத்தைச் சேர்ந்த செந்தில்குமார், ஷாஜன் மற்றும் விவியன் ரிச்சர்ட்ஸ் ஆகியோர் பதிவு செய்துள்ளனர்.
இனப்பெருக்கத் தோற்றத்தில் மீசை ஆலா
இயற்கை ஆர்வலர்கள் கூறுகையில், மீசை ஆலா பறவை வழக்கமாக ஏப்ரல் மாதத்திற்குள் தனது தாயகமான ஐரோப்பாவுக்கு திரும்பிவிடும். ஆனால், இந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கிய பின்னரும் ஒரு ஜோடி மீசை ஆலாக்கள் பண்ணவாடியில் தொடர்ந்து காணப்படுகின்றன.
மேலும், ஆண் மீசை ஆலா பறவை இனப்பெருக்கக் காலத்துக்கே உரிய கருமை நிற இறகுகளுடன் காணப்படுவது, அந்தப் பறவைகள் இப்பகுதியை இனப்பெருக்கத்திற்கும் ஏற்ற இடமாகத் தேர்வு செய்திருக்கலாம் என்பதைக் காட்டுவதாக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
மழைக்காடை, சிற்றாலாவும் தொடர்ந்து தங்கியுள்ளன
வடஇந்தியாவை வாழ்விடமாகக் கொண்ட மழைக்காடை பறவையும் இந்த ஆண்டு வழக்கத்தை விட முன்கூட்டியே பண்ணவாடியில் பதிவாகியுள்ளது. இந்தப் பறவை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை இங்கு தங்கியிருக்கலாம் என்று இயற்கை ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
அதேபோல், பொதுவாக கடலோரப் பகுதிகளில் அதிகம் காணப்படும் சிற்றாலா பறவையும் கடந்த டிசம்பர் மாதம் முதல் தொடர்ந்து பண்ணவாடியில் காணப்பட்டு வருகிறது.
சுற்றுச்சூழலுக்கு நல்ல அறிகுறி
அரிய மற்றும் வலசைப் பறவைகள் நீண்ட காலம் தங்கி வாழ்வதற்கு தேவையான நீர்வளம், உணவு வளம் மற்றும் பாதுகாப்பான வாழ்விடம் ஆகிய அனைத்தும் பண்ணவாடியில் இருப்பதாலேயே இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இது அப்பகுதியின் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தை வெளிப்படுத்தும் முக்கிய அறிகுறியாகவும் கருதப்படுகிறது.
