புதுடெல்லி: குடியுரிமை தொடர்பான வழக்குகளில் நியாயமான நடைமுறையை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ள உச்ச நீதிமன்றம், அந்நியர்கள் என அறிவிக்கப்பட்டிருந்த 27 பேருக்கு முக்கிய நிவாரணம் வழங்கியுள்ளது.
அஸ்ஸாமில் சட்டவிரோதமாக குடியேறியதாக சந்தேகிக்கப்படும் நபர்களை அடையாளம் காண அமைக்கப்பட்டுள்ள அந்நியர் தீர்ப்பாயங்கள், 27 பேரை அந்நியர்கள் என அறிவித்திருந்தன. அந்தத் தீர்ப்புகளை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடுகளையும் கவுகாத்தி உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியிருந்தது.
இதையடுத்து, சாவித்ரி டே, அஜ்பஹார் அலி, முகமது அக்பர் அலி, அபேதா காத்தூன், அனுவாரா காத்தூன் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அடங்கிய அமர்வு, குடியுரிமை மற்றும் அந்நியர் அந்தஸ்து தொடர்பான விவகாரங்கள் அரசியலமைப்பு ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை என்று குறிப்பிட்டது.
மேலும், இந்திய குடியுரிமையை சட்டவிரோதமாக பெற முயற்சிப்பதைத் தடுக்க அரசுக்கு உரிமை இருந்தாலும், அதற்காக நியாயமான நீதிமுறை பாதிக்கப்படக் கூடாது என்று நீதிமன்றம் வலியுறுத்தியது.
இதையடுத்து, கவுகாத்தி உயர்நீதிமன்றம் மற்றும் அந்நியர் தீர்ப்பாயங்கள் வழங்கிய தீர்ப்புகளை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், 27 பேரின் குடியுரிமை தொடர்பாக தீர்ப்பாயங்கள் புதிதாக விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.
அந்த மறுவிசாரணை நிறைவடையும் வரை, மனுதாரர்களுக்கு எதிராக எந்தவித கட்டாய நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மனுதாரர்கள் தாங்கள் இந்திய குடிமக்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் 1971-க்கு முந்தைய வாக்காளர் பட்டியல், நில ஆவணங்கள் மற்றும் மரபுவழித் தகவல்கள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த உத்தரவின் மூலம், 27 பேருக்கும் சட்டரீதியான முக்கிய இடைக்கால நிவாரணம் கிடைத்துள்ளது.
