வியட்நாமில் சுற்றுலாப் படகு விபத்து: 15 இந்தியர்கள் உயிரிழப்பு குறித்து நேரில் பார்த்தவர் அதிர்ச்சி தகவல்

 

புதுடெல்லி: தெற்கு வியட்நாமில் நடைபெற்ற சுற்றுலாப் படகு விபத்தில் 15 இந்தியர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, விபத்தை நேரில் பார்த்த இந்தியர் ஒருவர் பரபரப்பான தகவல்களை பகிர்ந்துள்ளார்.

ஆந்திரப் பிரதேசம் குண்டூர் பகுதியைச் சேர்ந்த ஆசிஷ் குமார், தனது நிறுவனத்தின் ஆண்டு சுற்றுலா நிகழ்ச்சிக்காக சக ஊழியர்களுடன் வியட்நாம் சென்றிருந்தார். அவர் கூறுகையில், சுற்றுலாப் பயணிகள் மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஒரு தீவிலிருந்து மற்றொரு தீவுக்கு படகுகளில் அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவித்தார்.

அதில், 32 இந்தியர்களை ஏற்றிச் சென்ற முதல் படகு, புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, கரையிலிருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் திடீரென கவிழ்ந்ததாக அவர் கூறினார்.

அந்த நேரத்தில், மற்ற இரண்டு குழுவினர் கரையில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்ததாகவும், படகு கவிழ்ந்ததை கண்டு உடனடியாக உதவிக்காக சத்தமிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், விபத்து நேரத்தில் வானிலை மோசமாக இல்லை என்றும், காற்றின் வேகம் இயல்பான அளவிலேயே இருந்ததாகவும் கூறிய அவர், மீட்புக் குழுவினர் விரைவாக சம்பவ இடத்துக்கு வந்தாலும், கரைக்கு கொண்டு வரப்பட்டவர்களுக்கு உடனடி மருத்துவ உதவி கிடைக்கவில்லை எனக் குற்றம்சாட்டினார்.

இந்த விபத்தில் 15 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பாக, பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே, படகின் கேப்டன் கைது செய்யப்பட்டுள்ளதாக வியட்நாம் போலீஸார் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பு நடைமுறைகள் மீறப்பட்டதா என்பது குறித்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Previous Next

نموذج الاتصال