சென்னை: பெருந்தலைவர் காமராஜரின் 123-வது பிறந்தநாளை முன்னிட்டு, ஜூலை 13 முதல் 19 வரை ஒரு வார கால சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது. இதனுடன் “லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர்” என்ற ஊழலுக்கு எதிரான மக்கள் விழிப்புணர்வு இயக்கமும் முன்னெடுக்கப்பட உள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூலை 13 மாலை சென்னை மெரினா கடற்கரையில் பெருந்தலைவர் காமராஜரின் உலக சாதனை மணல் சிற்பம் திறந்து வைக்கப்படும் என்றும், அது ஜூலை 19 வரை பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஜூலை 15 அன்று மாநிலம் முழுவதும் மாவட்டம், வட்டம், நகரம் மற்றும் கிராமம் என அனைத்து நிலைகளிலும் காமராஜர் சிலைகளுக்கும், சிலை இல்லாத இடங்களில் அவரது திருவுருவப் படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும். அதேநாளில் மாலை தெருமுனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, காமராஜரின் சேவைகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைக்கப்படும்.
மேலும், “லஞ்சம் கொடுக்கமாட்டோம், வாங்கமாட்டோம்” என்ற உறுதிமொழியை மக்களிடம் ஏற்படுத்தும் வகையில் கைரேகை பதிவு மற்றும் விழிப்புணர்வு இயக்கமும் நடத்தப்படும்.
இதன் தொடர்ச்சியாக, திருவானந்தபுரம் நினைவு இல்லத்தில் மரியாதை செலுத்துதல், வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் “லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர்” இயக்கத்தின் தொடக்க பொதுக்கூட்டம், சென்னை பல்லவன் சாலை காமராஜர் சிலை, தி.நகர் நினைவு இல்லம் மற்றும் சத்தியமூர்த்தி பவனில் அஞ்சலி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
ஜூலை 17 முதல் 19 வரை, அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஊழலுக்கு எதிரான கையெழுத்து மற்றும் கைரேகை உறுதிமொழி இயக்கம் மாநிலம் முழுவதும் நடைபெறும்.
விழாவின் நிறைவு நிகழ்ச்சியாக ஜூலை 19 அன்று மதுரையில் 2,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கும் காமராஜரின் பிரம்மாண்ட மனித உருவ அமைப்பு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சிகளில் பல்வேறு அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்க உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தெரிவித்துள்ளது.
