கோவை வேளாண் கண்காட்சியில் கவனம் ஈர்க்கும் நவீன தொழில்நுட்பங்கள்; விவசாயிகள் உற்சாகம்

 

கோவை: கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்று வரும் அக்ரி இன்டெக்ஸ் (Agri Intex) வேளாண் கண்காட்சி, நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் புதுமையான வேளாண் கருவிகளால் விவசாயிகள் மற்றும் பொதுமக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த கண்காட்சி ஜூலை 13 வரை நடைபெறுகிறது.

நாடு முழுவதும் இருந்து பங்கேற்றுள்ள நிறுவனங்கள், வேளாண் துறையில் பயன்படுத்தப்படும் அதிநவீன தொழில்நுட்பங்கள், இயந்திரங்கள் மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட தயாரிப்புகளை ஒரே இடத்தில் காட்சிப்படுத்தியுள்ளன.

கண்காட்சியின் முக்கிய அம்சங்கள்:

  • செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் கொண்ட வேளாண் தீர்வுகள்
  • பயிர்களுக்கு மருந்து தெளிக்கும் ராட்சத ட்ரோன்கள்
  • மொபைல் செயலி மூலம் இயக்கக்கூடிய சொட்டுநீர் பாசன அமைப்புகள்
  • சோலார் மின்சார பம்புகள் மற்றும் நீர் மேலாண்மை கருவிகள்
  • இயற்கை உரங்கள், நாட்டு விதைகள், மரக்கன்றுகள் மற்றும் பழக்கன்றுகள்
  • தேனீ வளர்ப்பு உபகரணங்கள், நர்சரி தொழில்நுட்பங்கள்
  • கால்நடை மற்றும் கோழிப்பண்ணை உபகரணங்கள்
  • பசுங்குடில் (Greenhouse) அமைக்கும் நவீன வசதிகள்
  • எண்ணெய் பிழியும் பாரம்பரிய கல் செக்கு
  • தேங்காய் நாரில் தயாரிக்கப்பட்ட சுற்றுச்சூழல் நட்பு நாற்று தொட்டிகள்

பார்வையாளர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்தவை வடஇந்திய நாட்டு மாடுகள், தென்னாப்பிரிக்காவின் போயர் (Boer) ரக ஆடுகள், மற்றும் விழுப்புரத்தைச் சேர்ந்த ஆட்டுப் பண்ணை காட்சிகள். இறைச்சி உற்பத்திக்காக வளர்க்கப்படும் போயர் ரக ஆடுகள் ஒரு ஆண்டில் 60–70 கிலோ வரை எடையை எட்டும் என்றும், 4 ஆண்டுகளில் 150 கிலோ வரை வளரக்கூடியவை என்றும் தெரிவிக்கப்பட்டது.

விவசாயிகள் கூறுகையில், "இன்றைய விவசாயம் தொழில்நுட்பத்துடன் இணைந்து வேகமாக முன்னேறி வருகிறது. நாட்டு விதைகள், இயற்கை விவசாயப் பொருட்கள் மற்றும் அதிநவீன இயந்திரங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இக்கண்காட்சி, விவசாயத்தின் புதிய பரிமாணங்களை அறிய சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது" என்றனர்.

Previous Next

نموذج الاتصال