சென்னை: டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபானங்களுக்கு கூடுதலாக ரூ.10 செஸ் (Cess) வரி விதிப்பது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை மாற்றியமைக்கும் வகையில், பாட்டிலுக்கு தனியாக ரூ.10 வசூலிப்பதற்குப் பதிலாக, அந்தத் தொகையை மதுபானத்தின் அதிகபட்ச சில்லறை விலையில் (MRP) சேர்க்கும் திட்டம் பரிசீலனையில் இருப்பதாக டாஸ்மாக் நிர்வாகம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், காலி பாட்டில்களை திரும்பப் பெறுதல் மற்றும் மறுசுழற்சி செய்வதற்கான பொறுப்பை சம்பந்தப்பட்ட மதுபான உற்பத்தி நிறுவனங்களிடமே ஒப்படைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளும் வகையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதேபோல், மதுபானங்களுக்கு ரூ.10 செஸ் வரி விதிப்பது தொடர்பாக வணிக வரித்துறை அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளதாகவும், இதற்காக தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரி (VAT) சட்ட விதிகளில் திருத்தம் செய்ய அரசு பரிசீலித்து வருவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற சிறப்பு அமர்வு, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை ஆறு வாரங்களுக்கு ஒத்திவைத்தது.