தவெக எம்எல்ஏ குதிரைப் பேரம் வழக்கு: முன்ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி உயர்நீதிமன்றத்தில் மனு

 சென்னை (Chennai):

தவெக எம்எல்ஏ இளையராஜா அளித்த குதிரைப் பேரம் தொடர்பான புகாரில் பெயர் இடம்பெற்றுள்ள நிலையில், செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

பேரவைத் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டால் ஆதரவாக வாக்களிக்க ரூ.35 கோடி வழங்குவதாக திமுகவினர் பேரம் பேசியதாக தவெக எம்எல்ஏ இளையராஜா புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த யூடியூபர் திருநாவுக்கரசு உள்ளிட்ட பலரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் முக்கிய நபர்களாக கருதப்படும் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோருக்கு விசாரணைக்காக போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால் இருவரும் விசாரணைக்கு ஆஜராகாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அசோக்குமார் ஏற்கனவே முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், தற்போது செந்தில் பாலாஜியும் முன்ஜாமீன் கோரி தனியாக மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

இதற்கிடையே, கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் செந்தில் பாலாஜி வெற்றி பெற்றதை எதிர்த்தும், அந்தத் தொகுதியின் தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஈரோட்டைச் சேர்ந்த பிரகாசம் சார்பில் வழக்கறிஞர் ஆர்.எம். பாபு முருகவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மற்றொரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவும் விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.


Previous Next

نموذج الاتصال