கே.கே.நகர் (KK Nagar, Chennai):
சென்னை கே.கே.நகரில் அமைந்துள்ள மத்திய அரசு ஊழியர் குடியிருப்பு வளாகத்தில், அடிப்படை வசதிகள் இல்லாததுடன் கட்டிடங்கள் இடிந்து விழும் அபாய நிலையில் இருப்பதாக குடியிருப்போர் வேதனை தெரிவித்துள்ளனர்.
மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய பொதுப்பணித் துறை (CPWD) சார்பில், கே.கே.நகர் காமராஜர் சாலையில் கடந்த 1970-களில் இந்த குடியிருப்பு வளாகம் கட்டப்பட்டது. தரைத்தளம் மற்றும் இரண்டு தளங்களைக் கொண்ட சுமார் 1,200 குடியிருப்புகளில் தற்போது 5,000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
குடியிருப்பு வளாகத்தின் பராமரிப்பு முழுவதும் மத்திய பொதுப்பணித் துறையின் பொறுப்பில் இருந்தாலும், பல ஆண்டுகளாக போதிய பராமரிப்பு மேற்கொள்ளப்படவில்லை என குடியிருப்போர் குற்றம்சாட்டுகின்றனர்.
மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் துரைபாண்டியன் கூறுகையில், பல குடியிருப்புகளில் மேற்கூரைகள் இடிந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், கதவுகள் மற்றும் ஜன்னல்கள் சேதமடைந்து தொங்கிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், குடிநீர் தொட்டிகள் மற்றும் கிணறுகள் முறையாக பராமரிக்கப்படாததால் சுத்தமான குடிநீர் கிடைப்பதில் சிக்கல் இருப்பதாகவும், குப்பைகள் அகற்றப்படாததால் வளாகம் முழுவதும் சுகாதாரமற்ற சூழல் நிலவுவதாகவும் அவர் கூறினார்.
குடியிருப்புப் பகுதியில் உள்ள சாலைகள் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளதுடன், தெருவிளக்குகள் எரியாததால் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் கூடும் இடமாக மாறிவிட்டதாகவும், விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சத்துடன் நடமாட வேண்டியுள்ளதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் பூங்கா பராமரிப்பின்றி பயன்பாடற்ற நிலையில் இருப்பதோடு, கழிவுநீர் வடிகால் மற்றும் மழைநீர் வடிகால் வசதிகளும் சரிவர செயல்படாததால் மழைக்காலங்களில் குடியிருப்பு பகுதிகளில் நீர் தேங்கி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
சுமார் 5,000 பேர் வசிக்கும் இந்த வளாகத்தில் பராமரிப்புப் பணிகளுக்குத் தேவையான அளவில் பணியாளர்கள் இல்லாததால் பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக குடியிருப்போர் தெரிவித்துள்ளனர். உடனடியாக கட்டிடங்களை ஆய்வு செய்து, சீரமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
