மதுரவாயல் (Maduravoyal, Chennai):
சென்னையில் வீட்டில் இருந்த 129 பவுன் தங்க நகைகளை சிறுகச் சிறுக திருடி தனது காதலனிடம் கொடுத்த இளம்பெண்ணின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் காதலன் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்து, நகைகள் மற்றும் சொத்துகளை பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை மதுரவாயல் ஏரிக்கரை லட்சுமி நகரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் சமீபத்தில் உயிரிழந்தார். அவருக்கு மனைவி மற்றும் 3 மகள்கள் உள்ளனர். குடும்பத்திற்கு தேவையான உதவிகளை அவரது சகோதரர் பன்னீர்செல்வன் செய்து வந்ததுடன், தனது 22 பவுன் நகைகளையும் அண்ணியிடம் பாதுகாப்பாக ஒப்படைத்திருந்தார்.
சில நாட்களுக்கு முன்பு நகைகளை சரிபார்த்தபோது, பன்னீர்செல்வனின் 22 பவுன் மற்றும் குடும்பத்திற்குச் சொந்தமான 107 பவுன் என மொத்தம் 129 பவுன் தங்க நகைகள் காணாமல் போனது தெரியவந்தது. இதையடுத்து அவர் மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் மேற்கொண்ட விசாரணையில், தமிழ்ச்செல்வனின் மூன்றாவது மகள் அருகிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தபோது கார்த்திக் (21) என்பவருடன் பழகி, பின்னர் அது காதலாக மாறியிருப்பது தெரியவந்தது.
கார்த்திக் தனது தந்தையின் உடல்நிலை மோசமாக இருப்பதாக கூறி பண உதவி கேட்டதாகவும், இதை நம்பிய இளம்பெண் வீட்டில் யாருக்கும் தெரியாமல் சிறுகச் சிறுக தங்க நகைகளையும் பணத்தையும் திருடி காதலனிடம் கொடுத்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
பெற்ற நகைகளை கார்த்திக் தனது நண்பர்களின் உதவியுடன் பல்வேறு இடங்களில் விற்று, அதன் மூலம் விலை உயர்ந்த செல்போன், இருசக்கர வாகனம் மற்றும் கார் வாங்கி ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து கார்த்திக், அவரது நண்பர்களான குமரகோபால் (20), பிரகாஷ் (22), ரமேஷ் (47) மற்றும் சூர்யா (28) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 6 பவுன் தங்க நகைகள், ரூ.50 ஆயிரம் ரொக்கம், ஒரு செல்போன், ஒரு இருசக்கர வாகனம் மற்றும் ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நகைகளை காதலனிடம் கொடுத்த இளம்பெண்ணிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
