சென்னை ஐஐடி நலவாழ்வு மையத்துக்கு சர்வதேச தரச்சான்று

 

சென்னை

சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (IIT Madras) நலவாழ்வு மையத்திற்கு ISO 45001:2018 என்ற சர்வதேச தரச்சான்று வழங்கப்பட்டுள்ளதாக, ஐஐடி இயக்குநர் வீ. காமகோடி தெரிவித்துள்ளார்.

மத்திய கல்வி அமைச்சகத்துடன் இணைந்து, சென்னை ஐஐடியில் தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த பேராசிரியர்களுக்கான மனநல நலவாழ்வு தொடர்பான இரு நாள் பயிலரங்கம் ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமை நடைபெற்றது.

மத்திய அரசின் மாளவியா மிஷன் ஆசிரியர் பயிற்சி திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்த பயிலரங்கில், தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

தொடக்க விழாவில் மத்திய கல்வி அமைச்சக இணைச் செயலாளர் ரீனா சோனோவால் கவுலி பேசுகையில், மாளவியா மிஷன் ஆசிரியர் பயிற்சி திட்டத்தின் மூலம் இதுவரை நடைபெற்ற பயிலரங்குகளால் 3,000-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பயனடைந்துள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ஐஐடி இயக்குநர் வீ. காமகோடி, தொழில்சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு மேலாண்மைக்கான ISO 45001:2018 சர்வதேச தரச்சான்று சென்னை ஐஐடி நலவாழ்வு மையத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.

இந்த அங்கீகாரத்தை TÜV NORD நிறுவனம் வழங்கியுள்ளதாகவும், மத்திய அரசின் உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் நலவாழ்வு மையத்திற்காக சர்வதேச தரச்சான்று பெற்ற முதல் நிறுவனம் சென்னை ஐஐடி என்பது குறிப்பிடத்தக்க சாதனை என்றும் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், ஐஐடி மாணவர் நலன் பிரிவு டீன் சத்யநாராயணா கும்மாடி, "மாணவர் ஆதரவின் மாற்றப் பயணம் – சென்னை ஐஐடி நலவாழ்வு மாதிரி" என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கினார்.

Previous Next

نموذج الاتصال