பெங்களூரு
கர்நாடக அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் சிவசங்கரப்பா சஹுகர், தனது மகளுக்கு போலி ஆவணங்கள் மூலம் அரசுப் பணி பெற்றுத் தந்ததாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம், தனது மகள் சுமாவுக்கு போலி சாதிச் சான்றிதழ் மற்றும் போலி வருமானச் சான்றிதழை பயன்படுத்தி அரசுப் பணி பெற்றுத் தந்ததாக சிவசங்கரப்பா சஹுகர் மீது புகார் எழுந்தது.
விசாரணையில், லட்சக்கணக்கில் சம்பளம் பெற்று வந்த நிலையிலும், குடும்பத்தின் ஆண்டு வருமானம் வெறும் ரூ.40 ஆயிரம் எனக் குறிப்பிட்டு கிரீமி லேயர் வரம்பை தவிர்க்கும் வகையில் தவறான வருமானச் சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது தெரியவந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அதிகார துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறி சிவசங்கரப்பா சஹுகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டுக்கு முறையிடப்பட்டது.
இந்த புகார்கள் குறித்து முதற்கட்ட ஆய்வு மேற்கொண்ட ஆளுநர் தாவர்சந்த் கெலாட், குற்றச்சாட்டுகளுக்கு போதுமான முகாந்திரம் இருப்பதாகக் கருதப்பட்டதால், சிவசங்கரப்பா சஹுகரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்வதாக உத்தரவிட்டார்.
மேலும், குற்றச்சாட்டுகள் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்துவதற்காக, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 317(1)-ஆம் பிரிவின் கீழ் குடியரசுத் தலைவரின் கவனத்திற்கும், உச்ச நீதிமன்றத்தின் பரிசீலனைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.