சகோதரர் குடும்பத்தை தாக்கிய வழக்கு: சமரச தீர்வு மையத்தில் அமைச்சர் மரிய வில்சன் ஆஜர்

 

சொத்து பிரச்சினை தொடர்பாக சகோதரர் குடும்பத்தை தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், சமரச பேச்சுவார்த்தைக்காக சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாநில சமரச தீர்வு மையத்தில் தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜரானார்.

கடந்த 2022 ஆகஸ்ட் 8-ஆம் தேதி, புதுச்சேரி எழில் நகரில் வசித்து வந்த தனது சகோதரர் மரிய குலோத் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று, மரிய குலோத் மற்றும் அவரது மனைவி கெரோலினை தாக்கியதாக அமைச்சர் மரிய வில்சன் மீது லாஸ்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கு புதுச்சேரி முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. குற்றப்பத்திரிகை நகலை பெற்றுக்கொள்ள நேரில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அமைச்சர் ஆஜராகவில்லை.

தற்போது தமிழக நிதியமைச்சராக பதவி வகித்து வரும் மரிய வில்சன், தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யவும், நேரில் ஆஜராகுவதிலிருந்து விலக்கு வழங்கவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், புதுச்சேரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுவதிலிருந்து அமைச்சருக்கு விலக்கு வழங்கினார். மேலும், இது குடும்ப பிரச்சினை என்பதால் இருதரப்பும் சமரசம் செய்து கொள்ளும் வாய்ப்பை பரிசீலிக்குமாறு வழக்கை மாநில சமரச தீர்வு மையத்திற்கு மாற்றி, ஜூலை 13-ஆம் தேதி ஆஜராக உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, அமைச்சர் மரிய வில்சன், மூத்த வழக்கறிஞர் காஜா மொய்தீன் ஹிஸ்தி மற்றும் வழக்கறிஞர் ராஜா சீனிவாசனுடன் சமரச தீர்வு மையத்தில் ஆஜரானார். அவரது சகோதரர் மரிய குலோத்தும் தனது தரப்பு வழக்கறிஞர்களுடன் நேரில் ஆஜரானார்.

சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சமரச பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படாததால், விசாரணையை ஜூலை 21-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து, அன்றைய தினமும் இருதரப்பினரும் மீண்டும் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

Previous Next

نموذج الاتصال