கே.கே.நகர் (KK Nagar, Chennai):
சென்னை கே.கே.நகரில் அமைந்துள்ள மத்திய அரசு ஊழியர் குடியிருப்பு வளாகத்தில், அடிப்படை வசதிகள் இல்லாததுடன், கட்டிடங்கள் இடிந்து விழும் அபாய நிலையில் இருப்பதாக குடியிருப்போர் வேதனை தெரிவித்துள்ளனர்.
மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய பொதுப்பணித் துறை (CPWD) சார்பில், 1970-களில் கே.கே.நகர் காமராஜர் சாலையில் இந்த குடியிருப்பு வளாகம் கட்டப்பட்டது. தரைத்தளம் மற்றும் இரண்டு தளங்களைக் கொண்ட 1,200 குடியிருப்புகளில் தற்போது சுமார் 5,000 பேர் வசித்து வருகின்றனர்.
வளாகத்தின் பராமரிப்பு மத்திய பொதுப்பணித் துறையின் பொறுப்பில் இருந்தாலும், பல ஆண்டுகளாக போதிய பராமரிப்பு மேற்கொள்ளப்படவில்லை என குடியிருப்போர் குற்றம்சாட்டுகின்றனர்.
மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் துரைபாண்டியன் கூறுகையில், பல கட்டிடங்களின் மேற்கூரைகள் இடிந்து விழும் நிலையில் உள்ளதாகவும், கதவுகள் மற்றும் ஜன்னல்கள் சேதமடைந்து தொங்குவதாகவும் தெரிவித்தார்.
மேலும், குடிநீர் தொட்டிகள் மற்றும் கிணறுகள் பராமரிப்பின்றி இருப்பதால் சுத்தமான குடிநீர் கிடைப்பதில் சிக்கல் நிலவுவதாகவும், குப்பைகள் முறையாக அகற்றப்படாததால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
சாலைகள் மோசமான நிலையில் உள்ளதுடன், தெருவிளக்குகள் எரியாததால் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் கூடும் இடமாக மாறியுள்ளதாகவும், விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.
குழந்தைகள் பூங்கா பயன்பாடின்றி கிடப்பதோடு, கழிவுநீர் மற்றும் மழைநீர் வடிகால் பராமரிப்பும் இல்லாததால் மழைக்காலங்களில் குடியிருப்பு பகுதிகளில் நீர் தேங்கி மக்கள் அவதியடைவதாக புகார் எழுந்துள்ளது.
சுமார் 5,000 பேர் வசிக்கும் இந்த வளாகத்தில் பராமரிப்புப் பணிகளுக்குப் போதிய ஊழியர்கள் இல்லாததால் பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக குடியிருப்போர் தெரிவித்துள்ளனர். உடனடி சீரமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
