சென்னை (Chennai):
தமிழகத்தில் அரசு ஒதுக்கீட்டில் கிடைக்கும் சுமார் 700 எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், மருத்துவக் கல்லூரிகள் இல்லாத 6 மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை உடனடியாக தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் செயல்பட்டு வரும் 6 தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக (Deemed University) மாற்றப்படுவதால், அரசு ஒதுக்கீட்டில் கிடைத்து வந்த சுமார் 700 எம்பிபிஎஸ் இடங்கள் இழக்கப்படும் நிலை உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த மாற்றத்தால், குறைந்த கட்டணத்தில் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு மறுக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் தற்போது அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மூலம் மொத்தம் சுமார் 13,000 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளதாகவும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்படும் இடங்கள் நீட் மதிப்பெண்களின் அடிப்படையில் நிரப்பப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை புனித பீட்டர் மருத்துவக் கல்லூரி, தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மற்றும் சீனிவாசன் மருத்துவக் கல்லூரி ஆகியவை ஏற்கனவே நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக மாறியதால், அவற்றில் மாநில அரசுக்குக் கிடைத்து வந்த 350 ஒதுக்கீட்டு இடங்கள் இழக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மதுராந்தகம் கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட மேலும் 3 தனியார் மருத்துவக் கல்லூரிகளும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக மாறவுள்ளதால், கூடுதலாக 350 அரசு ஒதுக்கீட்டு இடங்களும் பறிபோகும் அபாயம் இருப்பதாக அன்புமணி கூறியுள்ளார்.
தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக மாறிய பிறகு, மருத்துவக் கல்விக்கான கட்டணம் ரூ.23 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை உயரக்கூடும் என்றும், இதனால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் மருத்துவக் கல்வியை தொடர முடியாத சூழல் உருவாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையை சமாளிக்க, மருத்துவக் கல்லூரிகள் இல்லாத காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, தென்காசி மற்றும் பெரம்பலூர் ஆகிய 6 மாவட்டங்களிலும் தலா 150 எம்பிபிஎஸ் இடங்களுடன் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை தொடங்க வேண்டும் என்றும், தற்போது 100 இடங்கள் மட்டுமே உள்ள 16 அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா 50 இடங்களை கூடுதலாக உருவாக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
