சென்னை (Chennai):
பரந்தூரில் இரண்டாவது சென்னை விமான நிலையத்திற்கான ஓடுதளம் அமைப்பது சாத்தியமற்றது என அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்ததாக கூறப்படும் கருத்துக்கு, தமிழக பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக பாஜக தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமாரின் கருத்து உண்மைக்கு புறம்பானது என்றும், தமிழக மக்களை தவறாக வழிநடத்தும் வகையிலான அரசியல் நோக்கம் கொண்டது என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
முன்னாள் திமுக அரசே சென்னையின் இரண்டாவது விமான நிலையத்திற்காக பரந்தூரை தேர்வு செய்து, ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை முன்னெடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கான விரிவான முன்சாத்தியக்கூறு அறிக்கையை தமிழக அரசே இந்திய விமான நிலைய ஆணையத்திடம் (AAI) சமர்ப்பித்ததாகவும், 4,040 மீட்டர் × 45 மீட்டர் அளவிலான இரட்டை ஓடுதளங்களை அமைப்பதற்கான தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள் அதில் உறுதி செய்யப்பட்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் 2024 ஜூலை மாதத்தில் இட அனுமதியையும், 2025-ஆம் ஆண்டில் கொள்கை அளவிலான திட்ட அனுமதியையும் வழங்கியதாகவும், இந்திய விமான நிலைய ஆணையம், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA), பாதுகாப்பு அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஆய்வு மேற்கொண்ட பின்னரே இந்த அனுமதிகள் வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நீர்நிலைகள் தொடர்பான ஆய்வுகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு, ஓடுதளத்தை பாதுகாப்பாக அமைப்பதற்கான பல்வேறு பரிந்துரைகளை நிபுணர் குழுக்கள் வழங்கியிருந்த நிலையில், தற்போது ஓடுதளம் அமைப்பது சாத்தியமற்றது என்று கூறுவது தொழில்நுட்ப காரணங்களால் அல்ல; அரசியல் காரணங்களால் என நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார்.
இந்த திட்டம் தாமதமடைந்தால் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படுவதோடு, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் பாதிப்பு ஏற்படும் என்றும், சென்னையின் விமானப் போக்குவரத்து நெரிசல் மேலும் நீடிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
விமான நிலையம் அமைக்கப்படவுள்ள பகுதியில் உள்ள மக்களுக்கு உரிய இழப்பீடு மற்றும் மாற்று வாழ்வாதார வசதிகளை வழங்கி, பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை மேலும் காலதாமதமின்றி செயல்படுத்த வேண்டும் என்றும், மாற்றுத் திட்டம் இருந்தால் அதனை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றும் பாஜக வலியுறுத்தியுள்ளது.
