மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி ஆகஸ்டில் திறக்கப்படுமா? 90% கட்டுமானப் பணிகள் நிறைவு

 மதுரை (Madurai, Tamil Nadu):

மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியின் வகுப்பறைகள், ஆய்வகங்கள், மாணவர் விடுதிகள் உள்ளிட்ட முதற்கட்ட கட்டுமானப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், வரும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் மருத்துவக் கல்லூரி வளாகம் அதிகாரப்பூர்வமாக திறக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் தோப்பூர் அருகே உள்ள கோ.புதுப்பட்டியில் 220 ஏக்கர் பரப்பளவில் ரூ.2,021.51 கோடி மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மற்றும் விடுதிக் கட்டிடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஜப்பான் நாட்டின் ஜைக்கா (JICA) நிதியுதவியுடன் கடந்த 2024-ஆம் ஆண்டு மே 22-ஆம் தேதி கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன.

மொத்த திட்டப் பணிகளையும் 33 மாதங்களுக்குள், அதாவது 2027-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக மருத்துவக் கல்லூரி, மாணவர் விடுதிகள், ஆய்வகங்கள் மற்றும் வெளிநோயாளிகள் பிரிவு (OPD) கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இரண்டாம் கட்டத்தில் உள்நோயாளிகள் சிகிச்சைக்கான முக்கிய மருத்துவமனைக் கட்டிடங்கள் அமைக்கப்படவுள்ளன.

இந்த வளாகத்தில் மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி, மாணவர் விடுதிகள், மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கான குடியிருப்புகள், 750 இருக்கைகள் கொண்ட கூட்ட அரங்கம் உள்ளிட்ட மொத்தம் 24 கட்டிடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. உலகத் தரநிலைகளுக்கு ஏற்ப நவீன மருத்துவ வசதிகளுடன் இந்த வளாகம் உருவாக்கப்பட்டு வருகிறது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் மொத்தம் 900 படுக்கை வசதிகள் இடம்பெற உள்ளன. இதில் தொற்றுநோய் சிகிச்சைக்காக மட்டும் 150 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. விளையாட்டு மைதானம், மாணவர் விடுதிகள் மற்றும் குடியிருப்புகளின் கட்டுமானப் பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

தற்போது மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி, ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தற்காலிகமாக இயங்கி வருகிறது. மூன்று மாதங்களுக்கு முன்பு நான்காம் ஆண்டு மாணவர்கள் தோப்பூரில் கட்டி முடிக்கப்பட்ட விடுதியில் தங்க வைக்கப்பட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பயிற்சி பெற்று வருகின்றனர்.

மாணவர்களின் தற்போதைய விடுமுறை முடிவடைந்த பிறகு, புதிய வளாகத்தில் நேரடியாக வகுப்புகள் தொடங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கல்லூரி மற்றும் விடுதி கட்டிடப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், மீதமுள்ள பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.

இதையடுத்து, ஆகஸ்ட் மாத இறுதி அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் புதிய வளாகத்தில் வகுப்புகள் முழுமையாக தொடங்கப்படலாம் என்றும், ஆகஸ்ட் மாதத்திலேயே மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி வளாகம் அதிகாரப்பூர்வமாக திறக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Previous Next

نموذج الاتصال