புதுச்சேரி (Puducherry):
தமிழகத்தில் ஆளுநருடன் மோதல் போக்கை கடைப்பிடிக்க விரும்பவில்லை என்றும், முதல்வரும் ஆளுநரும் நல்ல புரிதலுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுச்சேரி காங்கிரஸ் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் தமிழக அமைச்சர்களிடம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்திற்கான நில எடுப்பு பணிகள் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பகுதிகளை உள்ளடக்கியதால், தமிழக முதல்வருடன் ஆலோசித்து அந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும், வீடூர் மற்றும் சாத்தனூர் அணைகளில் இருந்து புதுச்சேரிக்கு நீர் வழங்குவது, காரைக்காலுக்கு காவிரி கடைமடை நீரை வழங்குவது, திருச்செந்தூரில் புதுச்சேரி அரசுக்கான விடுதி அமைக்க தமிழக அரசு நிலம் ஒதுக்குவது உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்தும் சம்பந்தப்பட்ட துறைகளுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
புதுச்சேரிக்கு தனி மாநிலப் பல்கலைக்கழகம் இல்லாத நிலையில், தமிழகத்தில் அமைக்கப்படவுள்ள புதிய உலகத் தர பல்கலைக்கழகத்தில் புதுச்சேரி மாணவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.
புதுச்சேரியில் தவெக மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமைப்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றும், புதுச்சேரி காங்கிரஸ் நிர்வாகிகள் தமிழக முதல்வர் விஜய்யை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாகவும் அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்தார்.
முதல்வர் ரங்கசாமி எதிர்காலத்தில் தவெகவுடன் இணைய வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு, "அத்தைக்கு எப்போது மீசை முளைக்குமோ அப்போது பார்ப்போம்" என்று நகைச்சுவையாக பதிலளித்தார்.
தமிழகத்தில் ஆளுநரின் தலையீடு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், கடந்த காலங்களில் ஆளுநருடன் மோதல் போக்கு கடைப்பிடிக்கப்பட்டதாகவும், தற்போதைய அரசு அந்த அணுகுமுறையை பின்பற்ற விரும்பவில்லை என்றும் கூறினார்.
தமிழகத்தின் நலன் மற்றும் உரிமைகளை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முதல்வர் மேற்கொள்வார் என்றும், ஆளுநரும் முதல்வரும் சிறந்த புரிதலுடன் இணைந்து செயல்பட்டு வருவதால், பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்தார்.
