புதுடெல்லி: இந்தியாவின் கல்வி முறை நேர்மையற்றதாகவும், மாணவர்களை பொருளாதார மற்றும் மனஅழுத்தத்திற்கு உள்ளாக்கும் அமைப்பாகவும் மாறிவிட்டது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ராகுல் காந்தி, தேர்வு முறையை முழுமையாக மறுஆய்வு செய்து சீர்திருத்த வேண்டும், மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும், மேலும் தேர்வுகள் மற்றும் பணியாளர் நியமனங்களுக்கான கால அட்டவணையை ஒழுங்குபடுத்த வேண்டும் என்ற மூன்று முக்கிய கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக, கடந்த ஜூன் 17 அன்று ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் ‘மாணவர்களின் குரல்’ என்ற நிகழ்ச்சியை நடத்தினார். இதில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்று, அவரது கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இதன் தொடர்ச்சியாக, ஜூலை 17 அன்று உத்தராகண்ட் மாநிலம் டேராடூன் நகரில் நடைபெறவுள்ள ‘மாணவர்களின் குரல்’ நிகழ்ச்சியில் பங்கேற்க மாணவர்களுக்கு ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “ஊழல், அநீதி, பாரபட்சம், நேர்மையின்மை ஆகியவை இன்று இந்திய கல்வி முறையை மாணவர்கள் விவரிக்க பயன்படுத்தும் சொற்களாகிவிட்டன” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “கல்வி முறை மாணவர்களின் எதிர்காலத்தை உருவாக்க வேண்டிய நிலையில், தற்போது அவர்களையும் அவர்களின் குடும்பங்களையும் கடன், மனஅழுத்தம் மற்றும் விரக்திக்குள் தள்ளுகிறது. இதுபோன்ற சூழல்தான் வினாத்தாள் கசிவு மாஃபியாவை உருவாக்குகிறது. தவறு செய்தவர்கள் தப்பிக்கிறார்கள்; ஆனால் பாதிக்கப்படுவது மாணவர்கள்தான்” என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மோடி அரசும், மத்திய கல்வி அமைச்சகமும் இந்த பிரச்சினைகளில் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், கல்வித்துறையில் அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
