சென்னை: தமிழகத்தில் அதிக வீரியம் கொண்ட கோவிட்-19 வைரஸ் வகை பரவி வருவதாக எந்த ஆதாரமும் இல்லை என்றும், தற்போது நோய்த் தொற்று கடந்த ஆண்டுகளை விட குறைவாகவே இருப்பதாகவும் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை தெரிவித்துள்ளது.
அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த சிலரின் உயிரிழப்பு தொடர்பாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து பொதுமக்கள் அச்சமடைய வேண்டிய அவசியமில்லை என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
வேலூரில் சிகிச்சை பெற்ற 52 வயது நபர் Klebsiella pneumoniae என்ற பாக்டீரியா தொற்று, நீரிழிவு, நீண்டகால சிறுநீரக நோய் மற்றும் தீவிர சுவாசக் கோளாறு காரணமாக உயிரிழந்ததாகவும், அவருக்கு கோவிட்-19 தொற்றும் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 68 வயது மற்றொரு நோயாளி பெருங்குடல் புற்றுநோய் மற்றும் அதனால் ஏற்பட்ட சுவாச செயலிழப்பு காரணமாக உயிரிழந்ததாகவும், அவரிடம் கோவிட்-19 தொற்று தற்செயலாக மட்டுமே கண்டறியப்பட்டதாகவும் அரசு விளக்கியுள்ளது.
தமிழகத்தில் ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டம் மூலம் கோவிட்-19 பரவல் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அறுவை சிகிச்சைக்கு முன் மற்றும் குறிப்பிட்ட மருத்துவத் தேவைகளின் அடிப்படையில் வழக்கமான பரிசோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 2024-ஆம் ஆண்டு 990 பேர், 2025-ஆம் ஆண்டு 1,250 பேர், 2026-ஆம் ஆண்டு இதுவரை 335 பேர் என மொத்தம் 2,575 பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இவை அனைத்தும் வழக்கமான கண்காணிப்பின் போது கண்டறியப்பட்டவை மட்டுமே என்றும், நோய்ப் பரவல் அதிகரித்ததற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும் விளக்கப்பட்டுள்ளது.
மேலும், புனேயில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம் மேற்கொண்ட முழு மரபணு பகுப்பாய்வு பரிசோதனைகளில், தற்போது பரவி வரும் வைரஸ் வகை லேசான பாதிப்பை மட்டுமே ஏற்படுத்துவதாகவும், சமூகத்தில் குறைந்த அளவிலான பரவல் மட்டுமே இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
முதியவர்கள், கர்ப்பிணிகள், நீண்டகால நோய்கள் உள்ளவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்றும், காய்ச்சல், இருமல், தொண்டை வலி அல்லது சுவாசக் கோளாறு இருந்தால் அருகிலுள்ள அரசு மருத்துவமனையை அணுக வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வதந்திகளை நம்பாமல், அரசு வெளியிடும் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்றும், தேவையான அனைத்து தடுப்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.