திருப்பதியில் இருந்து சரக்கு லாரி மூலம் கஞ்சாவை கடத்தி வந்து, சென்னையில் வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த இருவரை போலீஸார் கைது செய்து, அவர்களிடமிருந்து 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.
கீழ்ப்பாக்கம் காவல் துணை ஆணையரின் தனிப்படை போலீஸாருக்கு, வியாசர்பாடி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில், வியாசர்பாடி சாஸ்திரி நகர் முதல் தெருவில் உள்ள வீட்டில் போலீஸார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 11 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதுடன், ராஜேஷ் (28) என்பவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்த சேதுராமன் (35) என்பவருடன் இணைந்து, ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து சரக்கு லாரி மூலம் கஞ்சாவை கடத்தி வந்து, சென்னையில் வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, சேதுராமனின் வீட்டிலும் போலீஸார் சோதனை நடத்தி மேலும் 11 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மொத்தமாக 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இருவரையும் கைது செய்த போலீஸார், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் இருவரும் நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.