ஆலந்தூரில் 5,500 சதுர அடி நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக புகார்; பரங்கிமலை போலீஸார் விசாரணை

 

சென்னை (ஆலந்தூர்), தமிழ்நாடு
Chennai (Alandur), Tamil Nadu

ஆலந்தூரில் உள்ள தனியார் நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து, நில அபகரிப்பில் ஈடுபட முயன்றதாக திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பரங்கிமலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை தியாகராய நகரைச் சேர்ந்த ராஜேஷ் சோமசுந்தரம், முதலமைச்சரின் தனிப்பிரிவில் அளித்த புகாரில், ஆலந்தூர் வடக்கு பரேடு சாலையில் தனக்குச் சொந்தமான 5,500 சதுர அடி நிலம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அந்த நிலம், 2024 மக்களவைத் தேர்தல் காலத்தில் தேர்தல் பணிமனை அமைப்பதற்காக முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசனின் உதவியாளர் ஜெய்சங்கர் அறிவுறுத்தலின் பேரில் குன்றத்தூரைச் சேர்ந்த உலகநாதனுக்கு ஆறு மாத குத்தகைக்கு வழங்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

ஆனால், குத்தகைக் காலம் முடிந்த பிறகும் நிலம் திருப்பி ஒப்படைக்கப்படவில்லை என்றும், கடந்த இரண்டு ஆண்டுகளாக வாடகையும் வழங்காமல் ஆக்கிரமித்து வைத்திருப்பதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்களை தொடர்புகொள்ள முயன்றபோது, போலி அடையாள ஆவணங்கள் பயன்படுத்தப்பட்டதாக தெரியவந்ததாகவும், பின்னர் முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசனை நேரில் சந்தித்து புகார் தெரிவித்தபோது, நிலத்தை வாங்கி அதற்கான பணம் வழங்குவதாக கூறியதாகவும் மனுதாரர் தெரிவித்துள்ளார்.

ஆனால், நிலத்தை விற்க மறுத்ததாகவும், தனது நிலத்தை மீட்டுத் தருவதுடன், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

இதையடுத்து, பரங்கிமலை துணை ஆணையர் அலுவலகத்திலும் புகார் அளிக்கப்பட்ட நிலையில், பரங்கிமலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.

Previous Next

نموذج الاتصال