சென்னை, ஜூலை 6:
அரசுப் பள்ளி மாணவிகளை "லாஸ்ட் பெஞ்ச்" என்று குறிப்பிட்டு பேசியதாக சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் வீடியோவைத் தொடர்ந்து, பள்ளிக்கல்வித் துறையின் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவை விமர்சித்துள்ளார்.
சிவகாசி அருகே திருத்தங்கலில் உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் கீர்த்தனா, மாணவிகளிடம் ஆங்கிலத்தில் சில கேள்விகளை எழுப்பினார். சில மாணவிகள் பதிலளிக்க முடியாமல் திணறிய நிலையில், சிலர் சரியான பதில்களை வழங்கினர்.
அப்போது, "இதையே லாஸ்ட் பெஞ்ச் மாணவிகளை நினைத்துப் பாருங்கள்" என்று அமைச்சர் கீர்த்தனா கூறியதாக வெளியாகியுள்ள வீடியோ சமூக ஊடகங்களில் பரவி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது சமூக வலைதளப் பதிவில், மாணவர்களை ஊக்குவிப்பதே அமைச்சர்கள் மற்றும் கல்வி நிர்வாகிகளின் முதன்மை பொறுப்பு என்றும், அவர்களை தாழ்வு மனப்பான்மைக்கு உள்ளாக்கும் வகையில் பேசக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், "தான் நினைப்பதுதான் சரி என பிடிவாதம் பிடிப்பது ஆய்வின் நோக்கம் அல்ல; அமைச்சரின் பணியும் அதுவல்ல. மாணவர்களையும் ஆசிரியர்களையும் ஊக்கப்படுத்த வேண்டும். 'லாஸ்ட் பெஞ்ச்' என்று சுட்டிக்காட்டி பேசுபவர்கள் பள்ளிகளுக்குள் செல்லாதீர்கள். மாணவர்களிடம் தாழ்வு மனப்பான்மையை வளர்க்காதீர்கள். தைரியமாக பதில் அளித்த அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் வாழ்த்துகள்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
அமைச்சர் கீர்த்தனாவின் கருத்து தொடர்பாக சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துகள் வெளியாகி வரும் நிலையில், இதுகுறித்து அவரது தரப்பிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை.
