17-வது நாள் உண்ணாவிரதம்: சோனம் வாங்சுக் உடல்நிலை கவலைக்கிடம்

 

லடாக்கைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி மேற்கொண்டுள்ள காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் 17-வது நாளை எட்டியுள்ளது. அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்கள் உண்ணாவிரதத்தை கைவிடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நீட் உள்ளிட்ட தேசியத் தேர்வுகளில் வினாத்தாள் கசிவு ஏற்பட்டதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, அதற்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு ஆதரவாக சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

17 நாட்களாக உணவு எதுவும் எடுத்துக்கொள்ளாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், பேச முடியாத அளவுக்கு அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, அவரது உடல் எடை 8.5 கிலோ குறைந்துள்ளதாகவும், உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும் போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தலைவர் அபிஜித் தீப்கே கூறுகையில், சோனம் வாங்சுக்கிடம் உண்ணாவிரதத்தை கைவிடுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும், ஆனால் அவர் போராட்டத்தைத் தொடர்வதில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், ஜூலை 20-ஆம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி நடைபெறவுள்ள பேரணிக்கான ஏற்பாடுகளை தொடர்ந்து மேற்கொள்ளுமாறும் சோனம் வாங்சுக் கேட்டுக் கொண்டதாக அவர் கூறினார்.

இதற்கிடையில், பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களும் சோனம் வாங்சுக்கை நேரில் சந்தித்து, உடல்நலனைக் கருத்தில் கொண்டு உண்ணாவிரதத்தை முடிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், “ஜனநாயகம், மனிதநேயம் மற்றும் சுற்றுச்சூழலுக்கான சோனம் வாங்சுக்கின் அர்ப்பணிப்பு அளவிட முடியாதது. அவர் நாட்டிற்கு மிக முக்கியமானவர். அவரது உயிர் பாதுகாக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவாலும், “சோனம் வாங்சுக் நாட்டின் சொத்து. போராட்டத்தை முன்னெடுக்க வேறு ஜனநாயக வழிகளும் உள்ளன. எனவே அவர் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Previous Next

نموذج الاتصال