சென்னை: தமிழகத்தில் அரசு வழக்கறிஞர்கள் நியமனம் சட்டப்பூர்வமாகவும், தகுதியின் அடிப்படையிலும் வெளிப்படையாக நடைபெற்று வருவதாக அரசு தலைமை வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்ததைத் தொடர்ந்து, லஞ்சம் பெற்று அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுவதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.
தமிழகத்தில் அரசு பொறுப்பேற்ற பின்னர், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நியமனங்களில் ரூ.5 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை லஞ்சம் பெறப்படுவதாக குற்றம்சாட்டி, தவெக வழக்கறிஞரணி இணைச் செயலாளர் எம். ஞானசவுந்தரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி முகமது ஷபீக் முன் விசாரணைக்கு வந்தபோது, அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, தமிழகம் முழுவதும் அரசு வழக்கறிஞர் பணியிடங்களுக்கு ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன என்றும், அவை அனைத்தும் தகுதி மற்றும் சட்ட விதிகளின் அடிப்படையில் நேர்மையாக பரிசீலிக்கப்பட்டு நியமனங்கள் செய்யப்பட்டு வருவதாகவும் விளக்கமளித்தார்.
மேலும், மனுதாரரின் விண்ணப்பமும் உரிய முறையில் பரிசீலிக்கப்படும் என்றும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
விசாரணையின் போது, திமுக மற்றும் அதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர்களின் பெயர்களும் அரசு வழக்கறிஞர் நியமனத்திற்கு பரிசீலிக்கப்பட்டுள்ளதாக மனுதாரரே ஒப்புக்கொண்டுள்ள நிலையில், பாரபட்சம் காட்டப்பட்டதாக கூற முடியாது என நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
இதையடுத்து, முதல்வர், அமைச்சர் மற்றும் தவெக மாவட்டச் செயலாளர் ஆகியோரின் பெயர்களை வழக்கில் இருந்து நீக்க மனுதாரர் தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்ற நீதிமன்றம், அரசு தலைமை வழக்கறிஞரின் விளக்கத்தை பதிவு செய்து, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது.