சென்னை: இந்திய விண்வெளி வரலாற்றில் புதிய அத்தியாயத்தை உருவாக்கும் வகையில், இந்தியாவின் முதல் முழுமையான தனியார் ஆர்பிட்டல் ராக்கெட்டான ‘விக்ரம்-1’ இன்று (ஜூலை 18) விண்ணில் ஏவப்பட உள்ளது.
ஆந்திரப் பிரதேசம், ஸ்ரீஹரிகோட்டா (Sriharikota, Andhra Pradesh) சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 11:30 மணிக்கு இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஏவுதல் நடைபெறுகிறது.
தனியார் விண்வெளி நிறுவனமான ‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்’ (Skyroot Aerospace) உருவாக்கியுள்ள இந்த ராக்கெட்டின் முதல் ஆர்பிட்டல் பயணத்திற்கு ‘மிஷன் ஆகமன்’ (Mission Aagman) என்று பெயரிடப்பட்டுள்ளது.
ஏவுதலுக்கான இறுதிக்கட்ட தொழில்நுட்ப சோதனைகள், தரைக் கட்டுப்பாட்டு மைய தகவல் தொடர்பு, ரேடார் கண்காணிப்பு உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. 36 மணி நேர கவுண்ட்டவுன் ஏற்கனவே தொடங்கிய நிலையில், ராக்கெட் ஏவுதளத்தில் தயார் நிலையில் உள்ளது.
இந்தியாவில் தனியார் நிறுவனம் தானே வடிவமைத்து உருவாக்கிய ஆர்பிட்டல் ராக்கெட்டை விண்வெளிக்கு அனுப்பும் முதல் முயற்சியாக இது கருதப்படுகிறது. இந்த சோதனையின் முக்கிய நோக்கம் செயற்கைக்கோளை மட்டும் செலுத்துவது அல்ல; ராக்கெட்டின் அனைத்து நிலைகளின் செயல்திறன், இயக்கம் மற்றும் விண்வெளிப் பயண தரவுகளை சேகரித்து அடுத்தடுத்த விண்வெளி பயணங்களுக்கு தொழில்நுட்ப அடித்தளத்தை உருவாக்குவதாகும்.
350 கிலோ வரை எடையுள்ள சிறிய மற்றும் நடுத்தர செயற்கைக்கோள்களை பூமியிலிருந்து சுமார் 450 கிலோமீட்டர் உயரத்தில் உள்ள தாழ்வான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தும் திறனுடன் ‘விக்ரம்-1’ வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுதல், இந்திய தனியார் விண்வெளித் துறையின் வளர்ச்சியில் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.