சாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த தமிழ் எழுத்தாளர் பூமணி (79) உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவரது உடல் இன்று சொந்த ஊரில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள ஆண்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பூமணி, 1947-ஆம் ஆண்டு மே 12 அன்று பிறந்தார். அவருக்கு மனைவி செல்லம், மகன்கள் சிபி, ரவி மற்றும் மகள் கவிதா உள்ளனர்.
கரிசல் மண் மக்களின் வாழ்க்கை, சமூக உறவுகள், சாதி அமைப்பு, உழைப்பாளர்களின் வாழ்வியல் ஆகியவற்றை எதார்த்தமாக தனது படைப்புகளில் பதிவு செய்ததன் மூலம் தமிழ் இலக்கியத்தில் தனித்துவமான இடத்தைப் பெற்றவர் பூமணி.
அவர் எழுதிய 'அஞ்ஞாடி' நாவலுக்காக 2014-ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. மேலும், 'வெக்கை' நாவல் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் 'அசுரன்' திரைப்படமாக வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. 'வாய்க்கால்', 'வரப்புகள்' உள்ளிட்ட பல படைப்புகளும் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
பூமணியின் உடல், அவரது சொந்த ஊரான ஆண்டிப்பட்டியில் இன்று மதியம் 1.30 மணிக்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
தலைவர்கள் இரங்கல்
முதல்வர் விஜய் தனது இரங்கல் செய்தியில், "கரிசல் நிலத்தின் மண் வாசனையையும், அடித்தட்டு மக்களின் வாழ்வியல் உண்மைகளையும், வரலாற்றின் ஆழமான சாட்சியங்களையும் தனது படைப்புகள் மூலம் தமிழ் இலக்கியத்திற்கு வழங்கிய மகத்தான படைப்பாளி பூமணி. அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு" என்று தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கல் பதிவில், "கரிசல்காட்டு மக்களின் வாழ்க்கையையும், வட்டார மொழியின் செழுமையையும் இலக்கியமாகப் பதிவு செய்த சிறந்த படைப்பாளி பூமணி. அவரது குடும்பத்தினருக்கும் இலக்கிய உலகிற்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கனிமொழி எம்.பி., மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், வீ த லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு அரசியல் மற்றும் இலக்கியத் துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.