சென்னை
தமிழக பொறியியல் படிப்புகளில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டின் கீழ் சிறப்புப் பிரிவினருக்கான ஆன்லைன் கலந்தாய்வு நேற்று தொடங்கியது.
இந்தப் பிரிவில், மாற்றுத்திறனாளிகளுக்கான 750 இடங்களுக்கு 159 பேரும், விளையாட்டு வீரர்களுக்கான 38 இடங்களுக்கு 525 பேரும், முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகளுக்கான 11 இடங்களுக்கு 14 பேரும் தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகளை தேர்வு செய்ய நேற்று காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மாணவர்களுக்கு தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்படும். அந்த ஒதுக்கீட்டை இன்று (ஜூலை 14) மாலை 5 மணிக்குள் மாணவர்கள் கட்டாயம் உறுதிசெய்ய வேண்டும் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை ஜூலை 15 காலை 7 மணிக்கு வெளியிடப்படும். மாணவர்கள் அதை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதனைத் தொடர்ந்து, சிறப்புப் பிரிவினருக்கான பொதுக் கலந்தாய்வு ஜூலை 15 முதல் 18 வரை இணையவழியில் நடைபெறும்.
பொதுப் பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 30 வரை தொடர்ந்து 40 நாட்கள் இணையவழியில் நடைபெற உள்ளது.
துணைக் கலந்தாய்வு உள்ளிட்ட அனைத்து சேர்க்கை நடைமுறைகளும் செப்டம்பர் 10-க்குள் நிறைவு செய்யப்படும் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.