சென்னை
எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வைக்க ஆளும் கட்சி திட்டமிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டிய திமுக, வைகோ மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கரின் பகிரங்க வாக்குமூலங்களை அடிப்படையாகக் கொண்டு எஃப்ஐஆர் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத் துறையில் மீண்டும் புகார் அளித்துள்ளது.
இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநருக்கு திமுக முதன்மைச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி அனுப்பியுள்ள மனுவில், சட்டவிரோத தூண்டுதல்கள், அரசியல் வாக்குறுதிகள் மற்றும் ஊழல் நடைமுறைகள் மூலம் திமுக எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக ஏற்கனவே புகார் அளித்திருந்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும், திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக சட்டவிரோத கைது மற்றும் காவல்துறை அழுத்தம் மூலம் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைய வற்புறுத்தப்பட்டதாக ஆளுநரிடம் தனி மனுவும் வழங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. எம்.ஆர். விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ஆளும் கட்சி தன்னை அணுகியதாகவும், ராஜினாமாவுக்குப் பிறகு அக்கட்சியில் இணையப் போவதாகவும் கூறியிருப்பது, தாங்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு நேரடி ஆதாரமாக இருப்பதாக திமுக தெரிவித்துள்ளது.
மேலும், சட்டப்பேரவையின் அமைப்பை மாற்றும் நோக்கில் இரு வகையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக மனுவில் கூறப்பட்டுள்ளது. ராஜினாமா செய்ய சம்மதிக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கு தேர்தல் ஆதரவு, நிதி உதவி மற்றும் அரசியல் சலுகைகள் வழங்குவதாக வாக்குறுதி அளிப்பதும், மறுப்பவர்களுக்கு வழக்குகள் பதிவு செய்து கைது நடவடிக்கைகள் மூலம் அழுத்தம் கொடுப்பதும் ஜனநாயகத்துக்கு எதிரானது என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 10-வது அட்டவணையில் உள்ள கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் அடிப்படைக் கொள்கையை இத்தகைய நடவடிக்கைகள் பாதிப்பதாகவும், வாக்காளர்களின் தீர்ப்பை மதிக்காத செயலாகவும் திமுக தெரிவித்துள்ளது.
லலிதா குமாரி - உத்தரப் பிரதேச அரசு வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, புலனாய்வுக்குரிய குற்றம் தெரியவந்தால் கட்டாயமாக எஃப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட நபரின் பதவி அல்லது செல்வாக்கு காரணமாக விதிவிலக்கு வழங்க முடியாது என்றும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, வைகோ மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கரின் பகிரங்க வாக்குமூலங்களை அடிப்படையாகக் கொண்டு உடனடியாக எஃப்ஐஆர் பதிவு செய்து, முழுமையான விசாரணை நடத்தி, பொறுப்புடையவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக வலியுறுத்தியுள்ளது.