மதுரை:
நிதிச்சுமையை காரணமாகக் காட்டி ஊழியர்களுக்கு சட்டப்படி வழங்கப்பட வேண்டிய சலுகைகள் மற்றும் உரிமைகளை மறுக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
மத்திய வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), 2014 செப்டம்பர் 1 முதல் மாதம் ரூ.15,000-க்கு மேற்பட்ட ஊதியத்தின் அடிப்படையிலும் ஓய்வூதியப் பங்களிப்பை செலுத்த முதலாளி மற்றும் ஊழியர் இணைந்து விருப்பத் தேர்வு செய்யலாம் என்று 2014 ஆகஸ்ட் 22-ஆம் தேதி அறிவித்திருந்தது. ஆனால், அறக்கட்டளை விதிகளின் கீழ் செயல்படும் நிறுவனங்களின் கூட்டு விருப்பத் தேர்வு விண்ணப்பங்களை வருங்கால வைப்பு நிதி அலுவலகம் நிராகரித்தது.
இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தனி நீதிபதி அந்த நிராகரிப்பு உத்தரவை ரத்து செய்தார். இதை எதிர்த்து மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் சதீஷ் குமார் மற்றும் ஜோதிராமன் விசாரித்து, சட்டப்படி நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட அதிகமான உண்மையான ஊதியத்தின் அடிப்படையில் ஓய்வூதிய நிதிக்கு பங்களிக்கும் உரிமையை அறக்கட்டளை விதிகளை காரணமாகக் காட்டி மறுக்கவோ அல்லது குறைக்கவோ முடியாது என்று தெளிவுபடுத்தினர்.
மேலும், உச்ச நீதிமன்றம் ஏற்கனவே இந்த விவகாரத்தில் நான்கு மாத அவகாசம் வழங்கியுள்ள நிலையில், சலுகைகளை நீட்டிப்பதால் அரசுக்கு நிதிச்சுமை ஏற்படும் என்ற வாதத்தை ஏற்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஒரு திட்டத்தை செயல்படுத்த கூடுதல் நிதி தேவைப்படும் என்ற காரணத்தால் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்டப்பூர்வ உரிமைகளை பறிக்க முடியாது என்றும், நிதிச்சுமை என்பது செல்லுபடியான காரணமாக இருக்க முடியாது என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது.
இதையடுத்து, மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், 2014 செப்டம்பர் 1-க்கு முன்பு ஓய்வு பெற்ற ஊழியர்களின் கோரிக்கைகளை உச்ச நீதிமன்ற உத்தரவு மற்றும் நடைமுறையிலுள்ள சட்டங்களின் அடிப்படையில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கவும், தற்போது பணியில் உள்ள ஊழியர்களின் விண்ணப்பங்களையும் சட்டப்படி ஆய்வு செய்யவும் வருங்கால வைப்பு நிதி ஆணையருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.