நாகர்கோவில் சிறை கைதி கொலை: வார்டன்களுடன் தாக்கிய 8 கைதிகளும் கைது

 

நாகர்கோவில்:


நாகர்கோவில் கிளைச் சிறையில் விசாரணைக் கைதி சபரிவர்மன் உயிரிழந்த சம்பவத்தில், சிறை வார்டன்களுடன் இணைந்து தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட 8 கைதிகளை போலீஸார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே இந்த வழக்கில் 3 சிறை வார்டன்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.


கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தங்காடு பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சபரிவர்மன் (33), பெட்டிக்கடை நடத்தி வந்தார். கடந்த ஜூலை 9-ஆம் தேதி, அவரது கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் இருந்ததாக தென்தாமரைக்குளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர் நாகர்கோவில் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.


இதையடுத்து, ஜூலை 13-ஆம் தேதி காலை சபரிவர்மன் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடல் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. உடலைப் பார்த்த உறவினர்கள் அவரது உடலில் பலத்த காயங்கள் இருந்ததாகக் கூறி, சந்தேக மரணம் என குற்றம்சாட்டி உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்த சம்பவம் தொடர்பாக நாகர்கோவில் குற்றவியல் நீதித்துறை நடுவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டதுடன், சிறையில் பதிவான கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டன.


பிரேத பரிசோதனை அறிக்கையில் சபரிவர்மனின் உடலில் 19 இடங்களில் கடுமையான காயங்கள் இருந்தது உறுதி செய்யப்பட்டது. அவர் தாக்கப்பட்டு உயிரிழந்தது உறுதியானதைத் தொடர்ந்து நேசமணிநகர் போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணையை விரிவுபடுத்தினர்.


விசாரணையில், சபரிவர்மனுக்கும் சில கைதிகளுக்கும் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து, அவரது கை, கால்களை கட்டிவைத்து சிறை வார்டன்கள் மற்றும் கைதிகள் இணைந்து தாக்கியதாக தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் தலைமை வார்டன் திருமலைநம்பி, வார்டன்கள் சிவகுமார் மற்றும் ஜெகன் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.


அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், கைதிகளான விஷ்ணு, ஜெகன், சாரதி, பெருமாள், சரத், சேதுராம், அஜித் மற்றும் அரவிந்த் ஆகிய 8 பேரையும் போலீஸார் கொலை வழக்கில் கைது செய்துள்ளனர்.


இதற்கிடையில், சபரிவர்மனின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், மேலும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, அவரது உறவினர்கள் உடலை பெற்றுக்கொள்ள மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Previous Next

نموذج الاتصال