திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் சென்றது தவறு: தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம்

 

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வழிபாடு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், திருப்பரங்குன்றம் விவகாரம், கோயில் சொத்துகள் மற்றும் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தார்.

தமிழகத்தில் கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் சொத்துகள் பல ஆண்டுகளாக முறைகேடாக அபகரிக்கப்பட்டு வருவது வேதனைக்குரியதாக இருப்பதாக அவர் கூறினார். கரூர் மாவட்டத்தில் கோயில் நிலம் தொடர்பான விவகாரத்தை விசாரிக்க தமிழக அரசு சிறப்பு குழுவை அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், பழநியில் சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள கோயில் நிலம் ரூ.2 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தை சுட்டிக்காட்டிய அவர், மாநிலம் முழுவதும் கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் சொத்துகள் குறித்து விரிவான அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்றார்.

திருப்பரங்குன்றம் தொடர்பான பிரச்சினையில் முந்தைய ஆட்சியில் ஏற்பட்ட நிலை தற்போதைய ஆட்சியிலும் தொடரக் கூடாது என்றும், இந்த விவகாரத்தில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியது தவறான முடிவு என்றும் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்தார்.

மேலும், தமிழகத்தில் கடந்த 50 நாட்களில் 4 லாக்கப் மரணங்கள் நிகழ்ந்திருப்பது ஏற்க முடியாத ஒன்று என்றும், மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார். இதுகுறித்து முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Previous Next

نموذج الاتصال