இந்தியாவில் முதன்முறையாக ‘பொறியியல் உயிரியல்’ படிப்பு அறிமுகம்

 

புதுடெல்லி: இந்தியாவில் முதன்முறையாக ‘பொறியியல் உயிரியல்’ (Engineering Biology) பாடப்பிரிவு அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (தனிப் பொறுப்பு) அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் அறிவித்துள்ளார்.


நிதி ஆயோக் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வியில் புதிய மைல்கல்லாக இந்தப் பாடப்பிரிவு அமையும் என்றார். மேலும், மருத்துவப் பள்ளிகளைத் தொடங்குவதற்காக இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் (IIT) மற்றும் இந்திய அறிவியல் கழகம் (IISc) உள்ளிட்ட முன்னணி கல்வி நிறுவனங்கள் அமைச்சகத்திடம் திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளதாக தெரிவித்தார்.


எதிர்கால மருத்துவத் துறையில் பல்துறை நிபுணர்களின் பங்களிப்பு அதிகரிக்கும் என்றும், அல்ட்ராசவுண்ட் மற்றும் எம்ஆர்ஐ போன்ற நவீன மருத்துவ பரிசோதனைகளில் ரேடியாலஜிஸ்டுகளுடன் இணைந்து எலக்ட்ரானிக்ஸ் பொறியாளர்களும் பணியாற்றும் சூழல் உருவாகும் என்றும் அவர் கூறினார்.


அதற்கேற்ப, மருத்துவம், உயிரியல் மற்றும் பொறியியல் துறைகளை ஒருங்கிணைக்கும் திறன் கொண்ட மனித வளத்தை உருவாக்குவது அவசியம் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.


மேலும், இந்தியாவின் உயிரிப் பொருளாதாரத்தை (Bioeconomy) வலுப்படுத்தி, 2047-ஆம் ஆண்டுக்குள் 2.6 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய உயிரிப் பொருளாதாரமாக நாட்டை முன்னேற்றும் இலக்கை மத்திய அரசு நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

Previous Next

نموذج الاتصال