கொளத்தூர் அஞ்சல் நிலையத்தில் பாஸ்போர்ட் சேவை மையம் தொடக்கம்

 

சென்னை: சென்னை கொளத்தூரில் உள்ள அஞ்சல் நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பாஸ்போர்ட் சேவை மையத்தை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் எல். முருகன் திறந்து வைத்தார்.


நிகழ்ச்சியின் போது 6 மாத குழந்தைக்கு பாஸ்போர்ட் வழங்கி, புதிய சேவை மையத்தின் செயல்பாட்டை அவர் தொடங்கி வைத்தார்.


பின்னர் பேசிய எல். முருகன், வங்கி, காப்பீடு, ஆதார் உள்ளிட்ட பொதுமக்களுக்கு தேவையான பல்வேறு சேவைகள் அஞ்சல் நிலையங்கள் மூலம் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.


மேலும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்ற பிறகு, அரசுத் திட்டங்களின் நிதி உதவிகள் இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும் நடைமுறை விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.


கடந்த 12 ஆண்டுகளில் 58 கோடிக்கும் அதிகமான ஜன் தன் (Jan Dhan) வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து தரப்பு மக்களும் அரசுத் திட்டங்களின் பயன்களை பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.


மின்னணு பணப் பரிவர்த்தனையில் இந்தியா உலக அளவில் முன்னணியில் இருப்பதாக குறிப்பிட்ட அவர், நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை உலகத் தரத்திற்கு உயர்த்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் இலக்கை நோக்கி அரசு செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.


இந்த நிகழ்ச்சியில் சென்னை மேயர் ஆர். பிரியா, வடசென்னை மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி, கொளத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் வி.எஸ். பாபு, வெளிவிவகார அமைச்சக இணைச் செயலாளர் ஈஷா ஸ்ரீவத்சா, தமிழக அஞ்சல் துறை மற்றும் பாஸ்போர்ட் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Previous Next

نموذج الاتصال