தாய்லாந்து கேளிக்கை விடுதியில் பயங்கர தீ விபத்து: 27 பேர் உயிரிழப்பு

 

பாங்காக்

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள பிரபல கேளிக்கை மற்றும் மதுபான விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர். மேலும் 73 பேர் காயமடைந்துள்ளனர்.

பாங்காக்கின் சடுசக் பகுதியில் அமைந்துள்ள 'ராங் பீர் நா லாட் ப்ராவ்' என்ற கேளிக்கை விடுதியில் மேடைக்கு அருகில் இருந்த மின் சாதனம் திடீரென வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், தீ மற்றும் கரும்புகை சில நிமிடங்களிலேயே முழு கட்டிடத்தையும் சூழ்ந்தது.

சம்பவம் தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. அதில், தீப்பற்றிய ஆடைகளுடன் உயிர் தப்புவதற்காக வாடிக்கையாளர்கள் அலறியபடி வெளியே ஓடிவருவது பதிவாகியுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் அரை மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுப்படுத்தினர்.

இந்த விபத்தில் 9 ஆண்கள் மற்றும் 18 பெண்கள் உயிரிழந்தனர். மேலும் 73 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் 25 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் பலர் கரும்புகையை சுவாசித்ததால் மூச்சுத்திணறி உயிரிழந்ததாகவும், சிலரது உடல்கள் கழிப்பறையில் இருந்து மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீயிலிருந்து தப்பிக்க அவர்கள் அங்கு தஞ்சமடைந்திருக்கலாம் என அதிகாரிகள் கருதுகின்றனர்.

விடுதியின் கூரையில் எளிதில் தீப்பற்றக்கூடிய அலங்காரப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டிருந்ததால் தீ வேகமாக பரவியிருக்கலாம் என்றும், ஏர் கண்டிஷனர் மின் கசிவே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்றும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிக்கை இன்னும் வெளியாகவில்லை.

மேலும், அவசரகால வெளியேறும் வழிகள் முறையாக செயல்படாதது அல்லது தடை செய்யப்பட்டிருந்தது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவ இடத்தை தாய்லாந்து பிரதமர் அனுதின் சர்ன்விராகுல் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், காயமடைந்தவர்களுக்கும் அரசு நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous Next

نموذج الاتصال