தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான விலையை உயர்த்த ஆலோசனை; ரூ.10 முதல் ரூ.50 வரை உயர வாய்ப்பு

 சென்னை (Chennai):

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களின் விலையை உயர்த்த தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்றாலும், அடுத்த வாரத்தில் புதிய விலை அமலுக்கு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் தற்போது 4,048 டாஸ்மாக் மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கடைகள் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக ரூ.150 கோடி அளவுக்கு மதுபான விற்பனை நடைபெறுகிறது. விஸ்கி, பிராந்தி, வோட்கா, ரம் உள்ளிட்ட இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மதுபானங்கள், பீர் மற்றும் ஒயின் உள்ளிட்ட பல்வேறு வகை மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

தற்போது, சாதாரண மற்றும் நடுத்தர ரக வெளிநாட்டு மதுபானங்கள் மற்றும் பீர் வகைகளின் விலையை ரூ.10 முதல் ரூ.50 வரை உயர்த்துவது குறித்து டாஸ்மாக் நிர்வாகம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற டாஸ்மாக் நிர்வாக வாரியக் கூட்டத்தில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் கே. விக்னேஷ், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகள் விரிவாக ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

மேலும், டாஸ்மாக் பார் உரிமங்களை இரண்டு மாதங்கள் நீட்டித்துள்ள நிலையில், புதிய டெண்டர் அறிவிப்பு மற்றும் அதில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும், மதுபான விலை உயர்வு தொடர்பாக இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்றும், விலை உயர்வின் அளவும் இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடைசியாக, 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி தமிழகத்தில் மதுபானங்களின் விலை ரூ.10 முதல் ரூ.80 வரை உயர்த்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

டாஸ்மாக் வட்டாரங்கள் கூறுகையில், இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மதுபானங்கள் மற்றும் பீர் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு உற்பத்தி மற்றும் விநியோகச் செலவுகள் அதிகரித்துள்ளதாகவும், அதனால் சில்லறை விலையை உயர்த்துமாறு அவர்கள் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், தமிழகத்தில் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுகட்டும் நோக்கிலும் இந்த விலை உயர்வு முன்மொழியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல், எதிர்காலத்தில் டாஸ்மாக் சில்லறை விற்பனையை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் சாத்தியம் குறித்தும் ஆலோசனை நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இதற்கு நிதித்துறை ஆதரவு அளிக்கவில்லை என்றும், அரசின் மதுபான வருவாய் பாதிக்கப்படும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மதுபான விலை உயர்வு தொடர்பாக இன்று அல்லது நாளை மீண்டும் உயர்மட்ட ஆலோசனை நடைபெற வாய்ப்புள்ளதாகவும், அதன் பின்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Previous Next

نموذج الاتصال