தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நெல் சேமிப்பு கிடங்கில், அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் திடீரென சரிந்து விழுந்ததில் பெண் கூலித் தொழிலாளர் ஒருவர் உயிரிழந்தார். மேலும், மற்றொரு பெண் தொழிலாளர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தஞ்சாவூர் அருகே ஆர்சுத்திப்பட்டு கிராமத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 6) காலை, தற்காலிக தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென நெல் மூட்டைகள் சரிந்து விழுந்தன. இதனால் அங்கிருந்த தொழிலாளர்கள் அலறியடித்து ஓடினர்.
இந்த விபத்தில், ஆர்சுத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சின்னப்பொண்ணு (65) மீது நெல் மூட்டைகள் விழுந்ததால், அவர் மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும், கீழக்கொருக்கப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சகுந்தலா என்பவரும் காயமடைந்தார். அவரை சக தொழிலாளர்கள் மீட்டு, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த தஞ்சாவூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, உயிரிழந்த சின்னப்பொண்ணுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நெல் மூட்டைகள் எவ்வாறு சரிந்து விழுந்தன, பாதுகாப்பு நடைமுறைகளில் ஏதேனும் அலட்சியம் ஏற்பட்டதா என்பது குறித்து போலீசார் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.
