சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணியை தொடங்கி வைத்த மதிமுக பொதுச் செயலாளர்; அரசியல் சூழல் குறித்து கடும் விமர்சனம்

 கோவை, ஜூலை 7:

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பள்ளேபாளையம் கிராமத்தில் மதிமுக சார்பில் நடைபெற்ற சீமைக் கருவேல மரங்களை அகற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தற்போதைய அரசியல் சூழல் குறித்து கடுமையாக விமர்சித்தார்.

மேட்டுப்பாளையம் சட்டப்பேரவைத் தொகுதி தவெக எம்எல்ஏ சுனில் ஆனந்த் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், வைகோ சீமைக் கருவேல மரங்களை வெட்டி அகற்றும் பணியை தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தவெக ஆட்சியை எப்படியாவது கவிழ்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் சிலர் வெறி கொண்டு செயல்பட்டு வருகின்றனர். அதற்காக மத்திய அரசின் பிரதிநிதியான ஆளுநரின் உதவியை நாடி, அரசியலமைப்புச் சட்டத்தின் 356-வது பிரிவை பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்" என்று குற்றம்சாட்டினார்.

மேலும், "இந்த ஆட்சியை கவிழ்க்க முடியாது. ஒருவேளை அப்படி நடந்தாலும், அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக 180-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும். நான் தற்போது தவெக கூட்டணியில் உள்ளேன். அரசின் செயல்பாடுகளில் குறைகள் இருந்தால் சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடமோ அல்லது முதல்வரிடமோ நேரடியாக தெரிவிப்பேன்; அதை சாலையில் நின்று பேச மாட்டேன்" என்றார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை முதல்வராக்க முயற்சிகள் நடைபெற்றதாகவும், அதற்கு அரசியல் காரணங்கள் உள்ளதாகவும் வைகோ விமர்சித்தார்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, பள்ளேபாளையம் பகுதியில் பரவலாக வளர்ந்திருந்த சீமைக் கருவேல மரங்கள் அறுவை இயந்திரம் மற்றும் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டன.

இந்நிகழ்வில் மதிமுக கோவை புறநகர் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் டி.டி. ரங்கநாதன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.


Previous Next

نموذج الاتصال