மதுரை மேலூர் தொகுதியின் முன்னாள் அதிமுக எம்எல்ஏ பெரியபுள்ளான் (செல்வம்) மகன் உலகாதிபதி உயிரிழந்த சாலை விபத்து தொடர்பாக ஜேசிபி வாகனத்தின் உரிமையாளரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னையில் உள்ள தனியார் சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த உலகாதிபதி, கடந்த சில நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தபோது, கிண்டி சர்தார் பட்டேல் சாலையில் விபத்தில் சிக்கினார். அப்போது பின்னால் வந்த ஜேசிபி வாகனம் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக முதலில் ஜேசிபி வாகன ஓட்டுநர் ராஜேஷ் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், உரிய விதிமுறைகளை மீறி வாகனம் இயக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஜேசிபி வாகனத்தின் உரிமையாளரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையின் அடிப்படையில், வழக்கில் ஜேசிபி வாகன உரிமையாளரையும் போலீஸார் கைது செய்து, அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்து தொடர்பாக வாகன இயக்கம், பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் சட்ட விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டனவா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.