ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் ஜந்து குமார் ஆடவர் ஹெவிவெயிட் பாரா பவர் லிஃப்டிங் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
இந்தப் பதக்கத்தின் மூலம் 2026 காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் பதக்கக் கணக்கை ஜந்து குமார் தொடங்கி வைத்துள்ளார். போட்டியில் அவர் முதல் முயற்சியில் 181 கிலோ எடையை வெற்றிகரமாக தூக்கினார். தொடர்ந்து இரண்டாவது முயற்சியில் 190 கிலோ எடையையும் வெற்றிகரமாக தூக்கி 130.9 புள்ளிகள் பெற்றார்.
மூன்றாவது முயற்சியில் 196 கிலோ எடையை தூக்க முயன்றாலும் அதில் வெற்றி பெற முடியவில்லை. இருப்பினும், அவர் பெற்ற 130.9 புள்ளிகள் வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்தன.
இந்தப் பிரிவில் நைஜீரியாவின் ரிலுவான் இட்ரிஸ் தங்கப் பதக்கத்தையும், இங்கிலாந்தின் மேத்யூ ஹார்டிங் வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.
போட்டியில் இந்தியாவின் மற்றொரு வீரரான சுதீர் இறுதியில் ஆறாவது இடத்தைப் பிடித்தார். ஜந்து குமாரின் வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் மற்றும் விளையாட்டு பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்திய அணிக்கான இந்த முதல் பதக்கம், அடுத்தடுத்த போட்டிகளில் வீரர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.