பெரம்பூர் ஐசிஎஃப் தொழிற்சாலையில் தெற்கு ரயில்வேக்காக 40 எல்எச்பி பெட்டிகள் தயாரிப்பு செய்தி

 

சென்னை

சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ICF), தெற்கு ரயில்வேக்காக கடந்த மாதம் மட்டும் 40 நவீன எல்எச்பி (LHB) ரயில் பெட்டிகள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரயில் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தவும், அதிக வசதியுடன் பயணிக்கவும், பழைய வகை பெட்டிகளுக்குப் பதிலாக எல்எச்பி ரக நவீன பெட்டிகள் விரைவு ரயில்களில் படிப்படியாக இணைக்கப்பட்டு வருகின்றன.

இந்த எல்எச்பி பெட்டிகள் சென்னை பெரம்பூர் ஐசிஎஃப் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு, இந்தியாவின் பல்வேறு ரயில்வே மண்டலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், தெற்கு ரயில்வேயின் முக்கிய விரைவு ரயில்களில் பழைய பெட்டிகளை மாற்றி புதிய எல்எச்பி பெட்டிகள் இணைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்றனர்.

கடந்த மாதத்தில் மட்டும் மன்னை விரைவு ரயில், சேது விரைவு ரயில், பரசுராம் எக்ஸ்பிரஸ், ஏலகிரி எக்ஸ்பிரஸ் மற்றும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களுக்காக 40 எல்எச்பி பெட்டிகள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

மேலும், நடப்பு ஆண்டில் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை தெற்கு ரயில்வேக்காக மொத்தம் 478 எல்எச்பி ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

நடப்பு நிதியாண்டில் சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் மொத்தம் 3,778 ரயில் பெட்டிகள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Previous Next

نموذج الاتصال