பெரம்பலூர்: முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதியில் தனது எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு அரசியல் கருத்துகளை தெரிவித்தார்.
அப்போது அவர், “அதிமுகவின் ஆதரவு தளத்தை பலவீனப்படுத்துவதே முதல்வர் விஜய்யின் அரசியல் நோக்கம். திமுக - அதிமுக கூட்டணி என்ற கருத்து ஆதவ் அர்ஜுனா வகுத்த அரசியல் வியூகம்” என்று விமர்சித்தார்.
மேலும், தவெக அரசின் செயல்பாடுகள் காரணமாக கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆதரிக்கவும், எதிர்க்கவும் முடியாத சூழலில் இருப்பதாகவும் அவர் கூறினார். தமிழகத்தில் பாஜக வலுப்பெறக்கூடாது என்ற நோக்கத்தில்தான் சில கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு அளித்ததாகவும் தெரிவித்தார்.
திமுக ஆட்சியில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் முதல்வரை நேரடியாக சந்தித்து கருத்துகளை பகிர முடிந்ததாகவும், தற்போதைய ஆட்சியில் அத்தகைய அணுகுமுறை இல்லை என்றும் சிவசங்கர் குற்றம்சாட்டினார்.
மேலும், கன்னியாகுமரி லாக்கப் மரணம், புதிய திட்டங்கள் அறிவிக்கப்படாதது, முந்தைய அரசின் திட்டங்களுக்கு பெயர்ப்பலகை மாற்றும் பணிகள் மட்டுமே நடைபெறுகின்றன என்பன உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களிலும் அவர் அரசை விமர்சித்தார்.
அதேபோல், திமுகவின் நலத்திட்டங்களை யாராலும் அழிக்க முடியாது என்றும், தமிழக அரசியலில் பாஜக நேரடியாக ஆட்சியை பிடிக்க முடியாததால் மாற்று அரசியல் முயற்சிகளில் ஈடுபடுகிறது என்றும் எஸ்.எஸ். சிவசங்கர் தெரிவித்தார்.