சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமா விவகாரம்: பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

 

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களுமான சி. விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்ட உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் சட்டப்பேரவை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளது.


விராலிமலை மற்றும் கரூர் தொகுதிகளில் வெற்றி பெற்ற இருவரும் தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்து, தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தனர்.


இதனைத் தொடர்ந்து, அவர்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டது அரசியல் சாசனத்திற்கும் சட்ட நடைமுறைகளுக்கும் முரணானது எனக் கூறி, அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.


தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருக்கும் நிலையில் ராஜினாமாவை ஏற்றது தவறானது என்றும், சபாநாயகர் உரிய பரிசீலனை இன்றி முடிவு எடுத்ததாகவும் மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு வரும் வரை விராலிமலை மற்றும் கரூர் தொகுதிகளை காலியிடங்களாக அறிவித்ததன் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதிக்கவும் கோரப்பட்டுள்ளது.


இந்த மனுக்களை தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வு விசாரித்தது. சட்டப்பேரவை செயலாளர், சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பி பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.


மேலும், ஏற்கனவே நான்கு எம்எல்ஏக்களின் ராஜினாமா தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகளுடன் இந்த மனுக்களையும் இணைத்து விசாரிக்க உத்தரவிட்ட நீதிமன்றம், அடுத்த விசாரணையை ஜூலை 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Previous Next

نموذج الاتصال