“இடைத்தேர்தலுக்கும் கரூர் நிகழ்வுக்கும் தொடர்பு இல்லை” - அமைச்சர் நிர்மல் குமார்

 

மதுரை:இடைத்தேர்தலுக்கும் கரூர் நிகழ்வுக்கும் எந்த தொடர்பும் இல்லை” என்று அமைச்சரும், தவெக மூத்த தலைவருமான நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திமுக மற்றும் அதிமுகவுக்கு அரசியல் எதிர்காலம் இல்லை. இரு கட்சித் தலைமைகளும் சுயலாபம் மற்றும் குடும்ப நலனுக்காக இணைந்து செயல்படத் தயாராகிவிட்டனர். அதனால் அந்த கட்சிகளில் இருந்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் தவெகவில் இணைந்து வருகின்றனர். அனைவருக்கும் உரிய மரியாதையும் அங்கீகாரமும் வழங்கப்படும்” என்றார்.

டிடிவி தினகரன் குறித்து பேசிய அவர், “ஒருகாலத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை துரோகிகள் என்று கூறி கட்சி தொடங்கியவர், இன்று அவரையே முதல்வராக்குவேன் என்கிறார். அவருடன் இருந்த ஆதரவாளர்களை கைவிட்டுவிட்டார். காலத்துக்கு ஏற்றபடி நிலைப்பாடு மாறுபடுகிறது” என்று விமர்சித்தார்.

கரூர் சம்பவம் குறித்து அவர் கூறுகையில், “இது மிகப்பெரிய உயிரிழப்பு சம்பவம். சதித் திட்டத்தின் விளைவாக நடந்தது. சம்பவம் நடந்தபோது கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) என்னுடன் இருந்தார். உயிரிழப்புகள் குறித்து அவருக்கே உடனடியாக தகவல் இல்லை. ‘சுவர் இடிந்ததா? வேறு ஏதேனும் அசம்பாவிதமா?’ என்று கேட்டபோது, ‘இரண்டு அல்லது மூன்று பேர் மயங்கியுள்ளனர்’ என்றுதான் தெரிவித்தார். அப்படியிருக்க, சம்பவம் நடந்த சில நிமிடங்களில் செந்தில் பாலாஜிக்கு தகவல் எப்படி கிடைத்தது?” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், “மத்திய அரசை எதிர்க்க வேண்டிய இடங்களில் நாங்கள் எதிர்ப்போம். பாஜகதான் எங்களின் கொள்கை எதிரி. அதில் எந்த சமரசமும் இல்லை” என்றும் தெரிவித்தார்.

கரூர் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்கியது இடைத்தேர்தலை முன்னிட்டு என எதிர்க்கட்சிகள் கூறுவது குறித்து பதிலளித்த அவர், “மக்களின் ஆதரவு எங்களுக்கு உள்ளது. தேர்தலை சந்திக்க நாங்கள் முழுமையாக தயாராக இருக்கிறோம். இடைத்தேர்தலுக்கும் கரூர் நிகழ்வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உண்மையான தலைவர்கள் யார், ஊழல்வாதிகள் யார் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும்” என்றார்.

முன்னதாக கரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் விஜய், “இடைத்தேர்தலில் திமுகவை நன்றாக வைத்து வெளுத்துவிடுங்கள்” என்று பேசியது குறிப்பிடத்தக்கது.

Previous Next

نموذج الاتصال